Published : 27 Dec 2022 04:00 AM
Last Updated : 27 Dec 2022 04:00 AM
கோவை: கோவை மாவட்டம் சிறுமுகை அருகேயுள்ள ஜடையம்பாளையம் வடக்கு வீதியை சேர்ந்தவர் முருகையன். விவசாயி. இவரது மனைவி சரோஜினி (60). கடந்த 21-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த சரோஜினி கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார்.
சிறுமுகை காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சரோஜினியை கொலை செய்து, வீட்டிலிருந்த 14 பவுன் நகையை மர்மநபர் திருடிச் சென்றது தெரியவந்தது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில், 5 தனிப்படைகள் அமைத்து மர்மநபரை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், சரோஜினியை கொலை செய்ததாக ஜடையம்பாளையத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது மகனும், தனியார் கல்லூரி மாணவருமான வசந்தகுமார் (22) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
இது தொடர்பாக போலீஸார் கூறியதாவது: வசந்த குமாரின் தாயார் தையல் தொழிலாளி. அவரிடம் சரோஜா தனது துணிகளை தைப்பதற்காக கொடுப்பது வழக்கம். துணியை கொடுத்துவிட்டு, தையல் கூலியை சரோஜாவின் வீட்டுக்குச் சென்று வசந்தகுமார் வாங்கி வருவார்.
இந்நிலையில், ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த வசந்தகுமார், அதில் பெரும் தொகையை இழந்துள்ளார். சம்பவத்தன்று சரோஜினியை கொன்று நகையை வசந்தகுமார் திருடிச் சென்றார். அந்த நகையை அடகு வைத்து ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். விசாரணையில் இந்த விவரம் தெரியவந்ததால், வசந்தகுமார் கைது செய்யப்பட்டார், என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT