Published : 21 Dec 2022 04:07 AM
Last Updated : 21 Dec 2022 04:07 AM

தருமபுரியில் வெவ்வேறு இடங்களில் 3 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு: போலீஸார் விசாரணை

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் வெவ்வேறுஇடங்களில் 3 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே தொட்லாம்பட்டியைச் சேர்ந்தவர் குமார் (30). இவரது மனைவி பவித்ரா. இவர்களுக்கு கடந்த செப்டம்பர் 21-ம் தேதிபெண் குழந்தை பிறந்தது. உடல் கழிவுகள் வெளியேற முடியாமல் குழந்தை சிரமப்பட்டதால் அறுவை சிகிச்சை மூலம் இதற்கான பிரத்யேக ஏற்பாடுகளை மருத்துவர்கள் செய்தனர்.

பின்னர், பவித்ரா தனது குழந்தையுடன் குமாரசாமிப்பேட்டையில் உள்ள பெற்றோர் வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில், கடந்த 19ம் தேதி குழந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தருமபுரி நகர காவல்நிலைய போலீஸார் விசாரிக் கின்றனர்.

அதேபோல, பென்னாகரம் அருகே தட்டாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் அருணாச்சலம் (25). இவரது மனைவி ராஜலட்சுமி (22). இவர்களுக்கு ஏற்கெனவே ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் மீண்டும் கருவுற்ற ராஜலட்சுமிக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்னர் ஆண் குழந்தை பிறந்தது. உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த குழந்தையை பரிசோதனை செய்தபோது இதயத்தில் துவாரம் இருப்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தபோதும் அந்தக் குழந்தை உயிரிழந்தது. இது தொடர்பாக, பாப்பாரப்பட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.

ஏரியூர் அடுத்த சிகரலஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (34). இவரது மனைவி கஸ்தூரி. இவர்களுக்கு ஏற்கெனவே 1 ஆண் மற்றும் 1 பெண் குழந்தை உள்ளனர். இந்நிலையில் மீண்டும் கருவுற்ற கஸ்தூரிக்கு கடந்த 2-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. கடந்த 18-ம் தேதி குழந்தைக்கு பால் கொடுத்தபோது புரையேறி சிரமப்பட்டுள்ளது.

வீட்டுமுறை சிகிச்சைகளை செய்து குழந்தையை உறங்க வைத்துள்ளனர். சற்று நேரத்துக்கு பின்னர் குழந்தை அசைவற்ற நிலையில் இருந்ததால் ஏரியூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தபோது குழந்தை உயிரிழந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஏரியூர் போலீஸார் விசாரணை நடத்து கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x