Published : 21 Dec 2022 06:12 AM
Last Updated : 21 Dec 2022 06:12 AM

சென்னை சைதாப்பேட்டையில் இரும்பு திருடியதாக இளைஞர் அடித்து கொலை: கும்பலாக தாக்கிய 7 பொறியாளர்கள் உள்பட 8 பேர் கைது

சாகின்ஷா காதர்

சென்னை: சைதாப்பேட்டையில் கட்டிடத்தில் திருடிய இளைஞர் கட்டி வைத்துஅடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக கட்டிட பொறியாளர்கள் 7 பேர் உட்பட8 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை சைதாப்பேட்டை, தாடண்டர் நகர் மைதானம் அருகே புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அங்கு வட மாநில தொழிலாளர்கள் பலர் தங்கி வேலை செய்து வருகின்றனர். கட்டிடம் கட்டதேவையான இரும்பு கட்டுமான பொருட்களும் அங்கே அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 3 பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தில் கட்டிட பகுதிக்கு சென்று அங்கிருந்த இரும்பு பலகையை திருடிக்கொண்டு, இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்றது.

இதை அங்கு தங்கியிருந்த தொழிலாளி ஒருவர் பார்த்து கூச்சலிட்டார். இதையடுத்து அங்கு தங்கிஇருந்த தொழிலாளர்கள், பொறியாளர்கள் ஒன்றிணைந்து கொள்ளையர்களை விரட்டினர். அப்போது, இருசக்கர வாகனத்தின் நடுவே அமர்ந்திருந்தவர் தப்பினார்.

வாகனத்தை ஓட்டியவர், பின்னால் அமர்ந்து திருடப்பட்ட இரும்புபலகையை பிடித்துக் கொண்டிருந்தவர் என இருவர் தொழிலாளர்களிடம் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து, பிடிபட்ட திருடர்கள் இருவரையும் கட்டி வைத்து இரும்புகம்பி மற்றும் கட்டையால் தாக்கியுள்ளனர். இதில், இருவரும் மயங்கி விழுந்துள்ளனர்.

இதையடுத்து தொழிலாளர்கள் அங்கிருந்து சென்றனர். இதற்கிடையில், இருசக்கர வாகனத்திலிருந்து தப்பியவர் நடந்த சம்பவம் குறித்து பிடிபட்டவர்களின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் சைதாப்பேட்டை போலீஸாருக்கு தெரிவித்தனர். இதையடுத்து சைதாப்பேட்டை போலீஸார் சம்பவ இடம் விரைந்து பலத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் இருந்த இருவரையும் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸாரின் விசாரணையில், இரும்பு திருடச் சென்றது சைதாப்பேட்டை வெங்கடாபுரத்தைச் சேர்ந்த சாகின்ஷா காதர் (23), அவரது நண்பர்கள் அதே பகுதியைச் சேர்ந்த ஹேமநாதன் (20)மற்றும் 16 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. இதில், நடுவில் அமர்ந்த ஹேமநாதன் தப்பி ஓடிய நிலையில் இருசக்கரவாகனத்தை ஓட்டிய 16 வயதுசிறுவன், திருடப்பட்ட இரும்புபலகையை பின்னாலிருந்து பிடித்திருந்த சாகின்ஷா காதர் இருவரும்பிடிபட்டு தாக்குதலுக்கு ஆளாகினர் என்பது தெரியவந்தது.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட சாகின்ஷா காதர் உயிரிழந்தார். 16 வயது சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த கொலை தொடர்பாக கட்டிட பொறியாளர்களான உமா மகேஷ்வரன் (33), ஜெயராம் (30), நம்பிராஜ் (29),பாலசுப்பிரமணியன் (29), சக்திவேல் (29), மனோஜ் (21), அஜித் (27), தொழிலாளி சிவபிரகாசம் (22) ஆகிய 8 பேரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x