Published : 18 Dec 2022 05:27 AM
Last Updated : 18 Dec 2022 05:27 AM
கோவை: கோவையில் 40 ஆண்டுகளாக திருட்டில் ஈடுபட்டு வந்த நபரை, நூறாவது முறையாக போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கோவை குனியமுத்தூரில் இருந்து ஒப்பணக்கார வீதி நோக்கி கடந்த 15-ம் தேதி அரசுப் பேருந்து வந்தது. பிரகாசம் பேருந்து நிறுத்தம் அருகே அப்பேருந்து நின்றபோது, குனியமுத்தூரைச் சேர்ந்த சபீர் அகமது என்ற பயணியின் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் திருட்டுபோனது தெரியவந்தது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி பேருந்தில் பயணித்த சக பயணி ஒருவர் செல்போனை திருடிக் கொண்டு கீழே இறங்கி தப்ப முயன்றார்.
பிரகாசம் பேருந்து நிறுத்தம் பகுதியில் சாதாரண உடையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மாரிமுத்து, உமா மற்றும் காவலர் கார்த்திக் ஆகியோர், செல்போனை திருடிவிட்டு தப்ப முயன்ற நபரை பிடித்தனர். போலீஸாரின் விசாரணையில் பிடிபட்ட நபர் கெம்பட்டி காலனியைச் சேர்ந்த ஆறுமுகம் என்ற போண்டா ஆறுமுகம் (55) எனத் தெரியவந்தது. அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
அதில், ‘பிடிபட்ட ஆறுமுகம் 40 ஆண்டுகளாக, அதாவது தனது 14 வயதில் இருந்து பிக்பாக்கெட், பணப்பை திருட்டு போன்ற திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். ஒவ்வொரு முறையும் திருட்டில் ஈடுபடுவதும் பின்னர் கைதாகி சிறைக்குச் சென்று சில வாரங்கள் இருப்பதும், பின்னர் பிணையில் வெளியே வந்ததும் மீண்டும் திருட்டில் ஈடுபடுவதையும் வாடிக்கையாக கொண்டிருந்தது தெரிந்தது.
இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.போண்டா திருடி மாட்டிக் கொண்டதால், போண்டா ஆறுமுகம் என அவர் அழைக்கப்பட்டதும் தெரியவந்தது. இதுவரை 99 முறை கைதாகியுள்ள தான், திருட்டில் ஈடுபட்டு 100-வது முறையாக கைதாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், போலீஸில் உள்ள தரவுகளின் படி கோவை மாநகரில் மட்டும் அவர் மீது 72 பிக்பாக்கெட் வழக்குகள் உள்ளன. இருப்பினும், சிறுவயதில் இருந்தே திருட்டில் ஈடுபட்டு வந்ததால், 100-வது முறை கைது என அவர் கூறுவது நம்பும் வகையில் தான் உள்ளது’ என்று போலீஸார் தெரிவித்தனர்.
போலீஸார் மேலும் கூறும்போது, ‘‘ஆறுமுகம் எந்த வேலைக்கும் செல்வதில்லை. சிறு, சிறு திருட்டில் ஈடுபட்டு கைதாவதை அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார். தற்போது 100-வது முறையாக கைதாகியுள்ளார். திருடிய பணத்தை ஜிபே போன்ற பணப்பரிமாற்ற செயலிகள் மூலம் மனைவிக்கு அனுப்பி வந்துள்ளார். தற்போது ஆறுமுகம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT