Published : 15 Dec 2022 04:30 AM
Last Updated : 15 Dec 2022 04:30 AM
மதுரை: மதுரையில் சமீபத்தில் அமல் படுத்திய காவல் நிலைய கண்காணிப்புத் திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்த கூடுதல் டிஜிபி சங்கர் அறிவுறுத்தியதாக காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுரை நகர் காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களின் குறைகளை கனிவோடு கேட்பதுடன், புகார்களுக்கு துரிதமாக நடவடிக்கை எடுக்கும் வகையில் ‘ கிரியேட் ’ என்ற கேமரா கண்காணிப்புத் திட்டம் சமீபத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் நகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் சிசிடிவி கேமராக்களால் கண்காணிக்கப்படுகின்றன. மேலும் காவல் நிலையத்தில் வரவேற்பாளர் நியமிக்கப்பட்டு, பொதுமக்களின் புகார்கள் உடனுக்குடன் கையாளப்பட்டு வருகின்றன. இதன்மூலம் காவல் நிலையங்களில் பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருப்பது தவிர்க்கப்படுகிறது.
பொதுமக்களிடம் வரவேற்பை பெற்ற இத்திட்டத்தின் செயல்பாடுகளை அண்மையில் மதுரைக்கு வந்திருந்த சட்டம், ஒழுங்கு கூடுதல் டிஜிபி சங்கர் ஆய்வு செய்தார். அதன் பிறகு மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் காவல் நிலைய கண்காணிப்பு திட்டத்தை மேலும் விரிவுபடுத்தலாம் என யோசனை தெரிவித்தார்.
இதுகுறித்து காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், இத்திட்டத்தை வரவேற்ற கூடுதல் டிஜிபி, சில ஆலோசனைகளை கூறிச் சென்றார். இதன்மூலம், இத்திட்டம் தமிழக அளவில் செயல்படுத்தப்படலாம் எனத் தெரிகிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT