Published : 14 Dec 2022 07:26 AM
Last Updated : 14 Dec 2022 07:26 AM

உடல் உறுப்புக்கு பணம் தருவதாக கூறிய மோசடி கும்பலிடம் இணையதளம் மூலம் ரூ.16 லட்சத்தை இழந்த சிறுமி

குண்டூர்: ஆந்திர மாநிலம், குண்டூர் அருகே உள்ள ஃபிரங்கிபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, ஹைதராபாத்தில் இண்டர்மீடியட் படித்து வருகிறார். சமீபத்தில் இவரது தந்தை ரூ.16 லட்சம் வங்கி கடன் வாங்கி இருந்தார். அதன் பின்னர், ஆன்லைன் வகுப்புக்காக தனது செல்போனை மகளிடம் கொடுத்துள்ளார்.

அப்போது, அந்த சிறுமி, ஆன்லைன் மூலம் ரூ.2 லட்சம்வரை வீண் செலவு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் இது தெரிந்துவிட்டால் தந்தை திட்டுவார் எனும் பயம் வந்ததால், தந்தையின் வங்கிக் கணக்கில் மீண்டும் அந்த ரூ.2 லட்சத்தை போட்டுவிட தீர்மானித்தார். அப்போது இணையதளத்தில் உடல் உறுப்பு தானம் தொடர்பான ஒரு விளம்பரத்தை பார்த்துள்ளார். அதில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டார். அப்போது, ஒரு சிறுநீரகத்தை தானம் செய்தால் ரூ.7 கோடி கொடுப்பதாகவும், அமெரிக்காவில் உள்ள ஒருவருக்கு சிறுநீரகம் அவசரமாக தேவைப்படுவதாகவும் தெரிவித்திருந்தனர். இதை நம்பிய அந்த சிறுமி, தனது சிறுநீரகத்தை கொடுக்க முன் வருவதாக தெரிவித்தார்.

ஓரிரு நாட்கள் கழித்து, தொடர்புகொண்ட மர்ம நபர் கேட்டுக்கொண்டபடி, தனது தந்தையின் வங்கி கணக்கு விவரத்தை வழங்கி உள்ளார். அதன் பின்னர், அந்த வங்கிக் கணக்கில் ரூ.3 கோடி அனுப்பி உள்ளதாகவும், மீதமுள்ள ரூ.4 கோடியை பெற, ரூ.16 லட்சம் வரி செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். ஆதலால் தனக்கு தெரிந்த சிலரிடம் ரூ.16 லட்சத்தை புரட்டிய மாணவி, அவர்களின் வங்கி கணக்குக்கு அனுப்பி வைத்தார். ஆனால், நாட்கள் பல கடந்தும் அவர்கள் கூறியபடி பணம் எதுவும் வராததால், தாம் ஒரு மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்தார்.

இதனை தொடர்ந்து மோசடி கும்பலை தொடர்பு கொண்டு பேசியபோது, அவர்கள் டெல்லி வந்தால் பணம் கொடுப்பதாகக் கூறியுள்ளனர். இதனால், அந்த சிறுமி வீட்டுக்கு தெரியாமல் டெல்லி சென்றுள்ளார்.

அங்கு மோசடி கும்பல் கொடுத்த முகவரி, ஒரு பொய்யான முகவரி என்பதை அறிந்து, செய்வதறியாது, கிருஷ்ணா மாவட்டம், கஞ்சிகசெர்லா கிராமத்தில் உள்ள தனது தோழியின் வீட்டுக்குச் சென்று விட்டார். தனது செல்போனையும் சுவிட்ச் ஆஃப் செய்து விட்டார். இதனால், பல முறை போன் செய்தும் மகள் போனை எடுக்காததால், இது தொடர்பாக குண்டூர் போலீஸ் எஸ்.பி ஆரிஃப் ஹபீஸிடம் பெண்ணின் பெற்றோர் புகார் அளித்தனர்.

அப்போது, அந்த சிறுமியின் செல்போன் எண்ணை வைத்து, அவர் இருக்குமிடத்தை போலீஸார் கண்டு பிடித்து குண்டூருக்கு அழைத்து வந்தனர். அப்போது போலீஸார் நடத்திய விசாரணையில் நடந்த விஷயங்கள் அனைத்தையும் போலீஸாரிடம் அவர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, உடல் உறுப்பு வர்த்தக மோசடி கும்பலை பிடிக்க குண்டூர் போலீஸார் தனிப்படை அமைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x