Published : 14 Dec 2022 04:05 AM
Last Updated : 14 Dec 2022 04:05 AM
திருப்பூர்: பல்லடம் அருகே கேத்தனூர் சுள்ளிமேட்டை சேர்ந்தவர் தாமோதரன் (60). திருப்பூர்- பல்லடம் சாலையில் உள்ள ராயர்பாளையம் விநாயகர் கோயிலில் நாள்தோறும் இருவேளை பூஜை செய்து வருகிறார்.
கடந்த 10-ம் தேதி வழக்கம்போலஇரவு பூஜையை முடித்துவிட்டு, அருகில் இருந்த மண்டபத்தில் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை 3 மணிக்கு கண் விழித்து பார்த்தபோது, கோயிலின் முன்பக்கம் அரிவாள், கத்தி ஆகிய ஆயுதங்களுடன் 7 பேர் நின்று கொண்டிருந்தனர். 7 பேரும் கோயிலில் கொள்ளையடிப்பதை பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.
இதையடுத்து தனது மகனுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு, ஊரில் உள்ளவர்களை அழைத்துக்கொண்டு கோயிலுக்கு வருமாறு தாமோதரன் தெரிவித்தார். அவர்கள் அளித்த தகவலின்படி பல்லடம் போலீஸாரும் அங்கு வந்தனர். விநாயகர் கோயிலின் அருகே ஆயுதங்களுடன் நின்றிருந்த 7 பேரையும் போலீஸார் பிடித்து விசாரித்தனர்.
அதில் தேனி மாவட்டம் வருசநாட்டை சேர்ந்த மோகன்குமார், வினோத்குமார், விஜய், ரமேஷ்குமார், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பெரியமண்டவாடியை சேர்ந்த வீரமணி, தேனி திம்மக்குண்டுவை சேர்ந்த ரஞ்சித், புதுக்கோட்டையை சேர்ந்த பிரவீன்குமார் என்பது தெரியவந்தது. 7 பேரையும் பல்லடம் போலீஸார் கைது செய்து, ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT