Published : 13 Dec 2022 04:30 AM
Last Updated : 13 Dec 2022 04:30 AM

உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ பெருமாள் கோயிலில் திருடப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான சிலைகள் மீட்பு

சென்னை ஆர்.ஏ.புரத்தில் மீட்கப்பட்ட, உளுந்தூர்பேட்டை ஆதிகேசவப் பெருமாள் கோயில் சிலைகள் உள்ளிட்ட 7 சுவாமி சிலைகள்

சென்னை: உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ பெருமாள் கோயிலில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான 3 சுவாமி சிலைகள் சென்னையில் உள்ள ஒரு வீட்டில் மீட்கப்பட்டன. அங்கிருந்து ரூ.2 கோடி மதிப்பிலான மேலும்4 சுவாமி சிலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ பெருமாள் கோயிலில் இருந்த ஆதிகேசவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய 3 சுவாமி சிலைகள் கடந்த 2011-ம் ஆண்டு திருடுபோயின. இதுகுறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் கோயில் அர்ச்சகர் புகார் கொடுத்தார். பின்னர், சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. திருடுபோன சிலைகளின் புகைப்படங்கள், கோயிலில் இருந்தன. அதன் அடிப்படையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி, ஐ.ஜி. தினகரன் மேற்பார்வையில் டிஎஸ்பி முத்துராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டது.

ராஜா அண்ணாமலைபுரம்: இந்நிலையில், உளுந்தூர்பேட்டை கோயிலில் திருடப்பட்ட சிலைகள் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் 7-வது பிரதான சாலை முதல் குறுக்கு தெருவை சேர்ந்த ஷோபா துரைராஜன் என்பவரது வீட்டில் இருப்பதாக தனிப்படை போலீஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீஸார் அவரது வீட்டில் சோதனை நடத்தினர். ஆதிகேசவ பெருமாள் கோயிலில் இருந்து கொள்ளைபோன 3 சுவாமி சிலைகளும் அங்கு இருந்தன. இதுதவிர, அஸ்திரதேவர், அம்மன், வீரபத்ரா, மகாதேவி ஆகிய4 சுவாமி சிலைகளும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டன.

இதையடுத்து, ஷோபா துரைராஜனிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் விசாரித்தபோது, ‘‘பழங்கால கலைப் பொருட்களை சேகரிப்பது எனது பொழுதுபோக்கு. கடந்த 2008-15 காலகட்டத்தில் அபர்ணா கலைக்கூடத்தில் இருந்துஇவற்றை வாங்கினேன். இவைகோயில் சிலைகள் என தெரியாது’’என்றார். பின்னர், அனைத்து சிலைகளையும் போலீஸாரிடம் ஒப்படைத்தார்.

300 ஆண்டுகள் பழமையானவை: இதில், உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ பெருமாள் கோயிலில் இருந்து திருடப்பட்ட 3 சிலைகளும் 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. அவற்றின் தற்போதைய சர்வதேச சந்தை மதிப்பு ரூ.5 கோடிக்கு மேல் இருக்கும். மற்ற 4 சிலைகளின் மதிப்பு ரூ.2 கோடி என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த 4 சிலைகளும் எந்த கோயிலுக்கு சொந்தமானவை என்று கண்டறிவதற்காக, அவற்றின் புகைப்படங்களை அறநிலையத் துறை அலுவலகத்துக்கு சிலை கடத்தல் தடுப்பு போலீஸார் அனுப்பியுள்ளனர்.

தமிழக கோயில்களில் திருடப்பட்ட பழமை வாய்ந்த சிலைகள் அமெரிக்கா, இங்கிலாந்து உட்படபல்வேறு நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தொன்மையான சிலைகள், தற்போது உள்நாட்டிலேயே, அதுவும்தமிழகத்திலேயே மீட்கப்பட் டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தீனதயாளனின் கலைக்கூடம்: அபர்ணா கலைக்கூடம் என்பது சமீபத்தில் காலமான பிரபல சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனுக்கு சொந்தமானது. எனவே, அவரது கும்பல்தான் உளுந்தூர்பேட்டை கோயிலிலும் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது.

இதுபற்றி அபர்ணா கலைக்கூட ஊழியர்களிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x