Published : 01 Dec 2022 06:56 AM
Last Updated : 01 Dec 2022 06:56 AM
ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே உள்ள வேதாளை கடற்கரை சாலையில் கடந்த 28-ம் தேதி மெரைன் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த காரை சோதனையிட்டபோது, 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட 30 தண்ணீர் கேன்களில் உரத்தை நிரப்பி இலங்கைக்கு கடத்திச் செல்ல கொண்டு செல்வது தெரியவந்தது.
உரத்தை பறிமுதல் செய்த போலீஸார், காரிலிருந்த கீழக்கரை நகராட்சி 19-வது வார்டு திமுக கவுன்சிலர் சர்ப்ராஸ் நவாஸ் (42), முன்னாள் திமுக கவுன்சிலர் ஜெயினுதீன் (45) ஆகியோரை மண்டபம் மெரைன் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கைப்பற்றப்பட்ட உரத்தில் போதைப் பொருட்கள் கலக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய ரசாயன சோதனைக்காக சென்னையில் உள்ள தடய அறிவியல் துறைக்கு அனுப்பினர்.
இதுகுறித்து ராமநாதபுரம் கடலோரப் பாதுகாப்பு குழும (மெரைன்) எஸ்.பி. சுந்தரவடிவேல் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: வாகனச் சோதனையில் சர்ப்ராஸ் நவாஸ், ஜெய்னுதீன், ஆகியோரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 394 கிலோ வெள்ளை நிற பவுடர், போதைப் பொருளோ அல்லது வெடிமருந்தோ இல்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. இருவரும் விவசாய உரத்தை மிக அதிக பணத்துக்கு இலங்கைக்கு அனுப்பவிருந்தது தெரிய வந்தது.
இந்தச் செயல் சுங்கத்துறை சட்டமீறலின்கீழ் வருவதால் இருவரையும், அவர்கள் கொண்டு வந்த பொருட்களையும் மண்டபம் சங்கத்துறை வசம் ஒப்படைத்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT