Published : 27 Nov 2022 04:25 AM
Last Updated : 27 Nov 2022 04:25 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மத்திகிரி டைட்டன் டவுன்ஷிப் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபாலன் (61). இவர் ஓசூர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார்.
இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த 23-ம் தேதி, ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தன்னை வங்கி மேலாளர் எனவும், உங்களது வங்கிக் கணக்கில் இன்னும் பான் எண் இணைக்காமல் உள்ளது. அதனை உடனடியாக இணைக்க தற்போது அனுப்பி வைக்கப்படும் இணையதள லிங்கில், அனைத்தையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இதனை நம்பிய ராஜகோபாலன், அவர் அனுப்பிய இணையதள முகவரியில் தனது வங்கி விவரங்கள் மற்றும் கிரெடிட் கார்டு எண்களை பதிவேற்றம் செய்தார். அடுத்த சில நிமிடங்களில் ராஜகோபாலன் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.6 லட்சத்து 32 ஆயிரத்து 665 எடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜகோபாலன், தனக்கு அழைப்பு வந்த எண்ணை தொடர்பு கொண்ட போது, அந்த எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜகோபாலன், நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT