Published : 27 Nov 2022 04:30 AM
Last Updated : 27 Nov 2022 04:30 AM
தாம்பரம்: தாம்பரம் அருகே கவுரிவாக்கத்தில் பூட்டிய நகைக் கடை ஒன்றில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள வைரம், தங்க நகைகளை திருடியதாக அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 3 சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையில் கவுரிவாக்கம் பகுதியில் ப்ளூ ஸ்டோன் என்ற தங்கம் மற்றும் வைர நகைகள் விற்பனை செய்யும் கடை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல வியாபாரம் முடிந்த பின்னர் கடையை பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்றனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் 4:30 மணியளவில் கடையின் ஊழியர் ஜெகதீஷ் என்பவரின் செல்போனுக்கு எச்சரிக்கை ஒலி அடித்துள்ளது. அதன் பின்னர் அவர் சுமார் ஆறு மணிக்கு மேல் எச்சரிக்கை ஒலி அடித்தது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறிக்கை தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர் சேலையூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன்பேரில் அங்கு வந்த போலீஸார் ஊழியர்கள் உதவியுடன் கடையை திறந்து பார்த்தபோது கடையில் வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. மேலும் கடையின் உள்ளே உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து அதில் பதிவாகியுள்ள கொள்ளையரின் அடையாளங்களை வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 3 இளம் சிறார்கள் கொள்ளச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து தேடுதல் வேட்டை நடத்தி அவர்களை பிடித்த போலீஸார், அவர்களிடமிருந்து ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள வைரம் மற்றும் தங்க நகைகளை கைப்பற்றினர். பின்னர் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சேலையூர் அருகே கவுரிவாக்கம் பகுதியில் உள்ள நகை கடையில் நடந்த கொள்ளை சம்பவம்தொடர்பாக அசாம் மாநிலம் குவாஹாட்டியைச் சேர்ந்த 3 சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளை நடந்த ஒன்றரை மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகள் அதே பகுதியில் உள்ள ஜூஸ் கடையில் வேலை பார்த்து வந்ததாகவும் முதல் முறையாக அவர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இந்தகொள்ளையில் வேறு யாராவது பின்புலத்தில் இருக்கிறார்களா என்பது குறித்தும்விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment