Published : 25 Nov 2022 02:33 PM
Last Updated : 25 Nov 2022 02:33 PM
திருச்சி: தொழில்திபர், கார் டிரைவர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சாமியார் கண்ணன் உள்பட இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் கிராப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் துரைராஜ். இவரது டிரைவர் சக்திவேல். இருவரும் கடந்த 2007-ம் ஆண்டு திருச்சி - திண்டுக்கல் சாலையில் வையம்பட்டி அருகே காருடன் வைத்து கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்டனர். திருச்சி மாவட்டத்தில் மட்டும் இன்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு தொடர்பாக முதலில் வையம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதில் துப்பு எதுவும் துலங்கவில்லை. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீஸ் பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டது. சிபிசிஐடி போலீஸ் பிரிவு துணை சூப்பிரண்டு மலைச்சாமி தலைமையில் போலீஸார் தீவிர புலன் விசாரணை நடத்தினார். புலன் விசாரணையின் அடிப்படையில் திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த சாமியார் கண்ணன், அவருக்கு நெருக்கமான யமுனா, யமுனாவின் தாயார் சீதா லட்சுமி ஆகிய மூவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
யமுனாவுடன் சாமியார் கண்ணனுக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்தது. இந்த நிலையில், யமுனாவுடன் தொழிலதிபர் துரைராஜ் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டதால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்த கொலை நடைபெற்றதாக சிபிசிஐடி போலீசார் தரப்பில் கூறப்பட்டது. இது தொடர்பான வழக்கு திருச்சி இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், வயது முதிர்வு மற்றும் நோய் காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சீதா லட்சுமி மரணம் அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து மற்ற இருவர் மீதும் தொடர்ந்து விசாரணை நடந்து வந்தது. அவர்கள் மீது சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் மொத்தம் 50 சாட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தனர், அவர்கள் கோர்ட்டில் ஆஜர் ஆகி சாட்சியமளித்தார்கள். அவர்களில் டிஎஸ்பி மலைச்சாமி, கிராம நிர்வாக அதிகாரி மற்றும் அரசு டாக்டர் ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவார்கள்.
இந்த வழக்கில் சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்னர் வழக்கறிஞர்கள் விவாதம் நடைபெற்றது. இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் ஆஜர் ஆன அரசு சிறப்பு வழக்கறிஞர் ராஜேந்திரன், குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஓம் பிரகாஷ் மற்றும் மனோகர் ஆகியோரின் வாதம் முடிவடைந்ததைத் தொடர்ந்து இன்று நீதிபதி ஜெயக்குமார் தீர்ப்பு வழங்கினார்.
அதன்படி, கொலை வழக்கில் தொடர்புடைய சாமியார் கண்ணன், அவருக்கு நெருக்கமான யமுனா ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT