Last Updated : 23 Nov, 2022 08:15 PM

 

Published : 23 Nov 2022 08:15 PM
Last Updated : 23 Nov 2022 08:15 PM

புதுச்சேரியில் 9 ஆண்டுகளுக்கு முன்பு பரோலில் வந்து கொலை: பிரபல ரவுடி உள்பட 4 பேர் கைது பின்னணி

விசாரணையில் போலீஸார்

புதுச்சேரி: சாலை போடுவதற்காக ரோடு தோண்ட உள்ளார்கள் என்பதால் 9 ஆண்டுகளுக்கு முன்பு பரோலில் வந்தபோது மனைவியை கொலையை செய்து புதைத்த இடத்தில் எலும்புக் கூட்டை தோண்டி எடுத்த பிரபல ரவுடி மற்றும் கூட்டாளிகள் உட்பட 4 பேர் கைதாகியுள்ளனர்.

புதுச்சேரி முதலியார்பேட்டை அனிதா நகரைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி பாஸ்கர் (48). இவர் பிரபல தாதா கருணாவின் சகோதரர். கொலை, கொள்ளை உட்பட பல வழக்குகள் பாஸ்கர் மீது உள்ளன. வழக்கு ஒன்றில் தண்டனை பெற்ற சிறைக்கு சென்ற பாஸ்கர், கடந்த 2016-ம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்தார். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ரவுடி பாஸ்கர், முதலியார்பேட்டை உழந்தை ஏரிக்கரையில் ஆதரவாளர்களுடன் குழி தோண்டி சடலத்தை எடுத்ததாக சிறப்பு அதிரடிப்படைக்கு தகவல் கிடைத்தது.

பாஸ்கரின் கூட்டாளிகள் அனிதா நகரைச் சேர்ந்த வேல்முருகன் என்ற தாடி வேலு, கருப்பு என்ற சரவணன், சக்தி நகர் மனோகர் ஆகிய மூவரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது கடந்த 2012-ல் பாஸ்கர் மனைவி எழிலரசியை கொலை செய்து குழி தோண்டி புதைத்ததாகவும், அங்கிருந்த எலும்புக் கூட்டை எடுத்ததாகவும் வாக்குமூலம் தந்தனர்.

இதையடுத்து பாஸ்கரை இன்று கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், "பாஸ்கர் சிறையில் இருந்தபோது அவரது மனைவி எழிலரசி மீது சந்தேகம் இருந்தது. கடந்த 2013-ல் 30 நாட்கள் பரோலில் பாஸ்கர் வந்தபோது, அவரது மனைவி எழிலரசி கிருமாம்பாக்கத்தில் அவரது தங்கை வீட்டில் இருந்தார். அங்கு சென்ற பாஸ்கர் அவரது மனைவியை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். காரில் வந்தபோது அவரது கூட்டாளிகள் பாம் வேலு, கருப்பு சரவணன், மனோகர் ஆகியோரும் இருந்துள்ளனர். சேலையில் கழுத்தை நெரித்து எழிலரசியை கொன்று வேல்ராம்பட்டு ஏரிக்கரையில் ஏற்கெனவே குழி தோண்டி வைத்திருந்த இடத்தில் புதைத்துள்ளனர். உடல் மக்கிப்போக ரசாயனமும் தெளித்துள்ளனர்.

பரோல் முடிந்து சிறைக்கு பாஸ்கர் சென்று விட்டு கடந்த 2015-ல் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். தற்போது ஏரிக்கரையை ஒட்டி புறவழிச்சாலை பணிகள் நடப்பதால் மாட்டிவிடுவோம் என்று பயந்து, இரு மாதங்கள் முன்பு ஜேசிபி மூலம் தோண்டி, மனைவி எலும்புக்கூட்டை எடு்த்து ஏரியில் வீசியுள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போது தேடி வருகிறோம். இச்சம்பவம் தொடர்பாக பாஸ்கர் உட்பட 4 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்" என்று குறிப்பிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x