Last Updated : 23 Nov, 2022 04:35 AM

 

Published : 23 Nov 2022 04:35 AM
Last Updated : 23 Nov 2022 04:35 AM

அவசர எண் 100-க்கு தகவல் கிடைத்தவுடன் போலீஸ் சம்பவ இடத்துக்கு விரைவாக செல்வதில் அரியலூர் முதலிடம்

திருச்சி: பொதுமக்களிடமிருந்து காவல்துறையின் அவசர எண்ணான 100-க்கு தகவல் கிடைத்தவுடன், மிக விரைவாக சம்பவ இடத்துக்குச் செல்வதில் அரியலூர் மாவட்டகாவல் துறை முதலிடம் பிடித்துள்ளது.

காவல் துறையை பொதுமக்கள் எளிதில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிப்பதற்காக அவசர தொலைபேசி எண் 100 செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்ட, மாநகர காவல் அலுவலகங்களிலும் தனிக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீஸார் பணியாற்றுகின்றனர்.

கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு வரும் அழைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, புகாரில் குறிப்பிடப்படும் இடங்களுக்கு அந்தந்த பகுதி போலீஸார் விரைந்து சென்று பிரச்சினைக்கு உரிய தீர்வுகாண வேண்டுமென அனைத்து மாவட்டபோலீஸாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், புகார் கிடைத்த நேரத்தில் இருந்து எவ்வளவு நேரத்துக்குள் போலீஸார் சம்பவ இடத்துக்கு செல்கின்றனர் என்பதையும் கணக்கிட்டு மாநில அளவில் மாவட்ட வாரியாக தரவரிசை வெளியிடப்பட்டு வருகிறது.

அதன்படி, அக்.16-ம் தேதி முதல் அக்.31-ம் தேதி வரையிலான காலத்தில் அவசர தொலைபேசி எண்ணான 100-க்கு தகவல் கிடைத்ததிலிருந்து சராசரியாக 4.24 நிமிடங்களுக்குள் சம்பவ இடத்துக்குச் சென்று அரியலூர் மாவட்ட காவல்துறை மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து 4.27 நிமிடங்களுடன் தேனி மாவட்டம் 2-ம் இடமும், 4.29 நிமிடங்களுடன் சென்னை பெருநகர காவல் துறை 3-ம் இடமும் பிடித்துள்ளன. திருச்சி மாவட்ட காவல் துறை 4.36 நிமிடங்களுடன் 4-வது இடமும், திருச்சிமாநகர காவல்துறை 5 நிமிடங்களுடன் 11-வது இடமும் பிடித்துள்ளன.

38வது இடத்தில் தஞ்சாவூர்: இவைதவிர, மத்திய மண்டலகாவல் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள பெரம்பலூர் மாவட்டம் 4.51 நிமிடங்களுடன் 9-ம் இடம், திருவாரூர் மாவட்டம் 5.05 நிமிடங்களுடன் 12-ம் இடம், புதுக்கோட்டை மாவட்டம் 5.06 நிமிடங்களுடன் 13-ம்இடம், கரூர் மாவட்டம் 5.24 நிமிடங்களுடன் 17-ம் இடம், நாகப்பட்டினம் மாவட்டம் 5.34 நிமிடங்களுடன் 20-ம் இடம், தஞ்சாவூர் மாவட்டம் 9.9 நிமிடங்களுடன் 38-வது இடமும் பிடித்துள்ளன.

16 நாட்களில் 42,528 அழைப்புகள்: இது குறித்து காவல் அதிகாரிகள் கூறும்போது, ‘‘அவசர தொலைபேசி எண்ணான 100-க்கு அளிக்கும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அக்.16-ம் தேதி முதல் அக்.31-ம்தேதி வரை தமிழக காவல் துறையின் அவசர தொலைபேசி எண்ணான 100-க்கு 42,528 அழைப்புகள் வந்துள்ளன. அதிகபட்சமாக சென்னை பெருநகர காவல் துறைக்கு 8,460 அழைப்புகள், ஆவடிக்கு 2,790 அழைப்புகள், தாம்பரத்துக்கு 2,444 அழைப்புகள் வந்துள்ளன. திருச்சி மாவட்டத்துக்கு 890 அழைப்புகள், திருச்சிமாநகரத்துக்கு 626 அழைப்புகள் வரப்பெற்றுள்ளன.

இவற்றில் கிடைத்த தகவலுக்கு உடனுக்குடன் சம்பவ இடத்துக்கு விரைந்த பட்டியலில் அரியலூர் முதலிடமும், விருதுநகர் மாவட்டம் கடைசி இடமும் பிடித்துள்ளன. 100-க்கு வரக்கூடிய ஒவ்வொரு அழைப்பு மீதும் தனிக்கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் தாங்கள் பகுதிகளில் நடைபெறும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், குற்றச் சம்பவங்கள், விபத்துகள் போன்றவை குறித்து உடனடியாக காவல் துறைக்கு தகவல் அளிக்கலாம்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x