Published : 22 Nov 2022 07:37 AM
Last Updated : 22 Nov 2022 07:37 AM
சென்னை: சென்னை திருவான்மியூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான தொன்மை வாய்ந்த 15 உலோக சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு போலீஸார் மீட்டுள்ளனர். இதுதொடர்பாக ராஜஸ்தானை சேர்ந்தவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தலைமறைவான இடைத் தரகரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை திருவான்மியூர் பகுதியில் பழமை வாய்ந்த சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை விற்பனை செய்ய இடைத் தரகர் மூலம் பேரம் பேசப்பட்டு வருவதாகவும் தமிழக காவல் துறையின் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பிரிவின் டிஜிபி ஜெயந்த் முரளி, ஐ.ஜி. தினகரன் மேற்பார்வையில் டிஎஸ்பி முத்துராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீஸார் தீவிரகண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஈரோட்டை சேர்ந்தசுரேந்திரன் என்பவர் இதில் இடைத்தரகராக செயல்படுவது தெரியவந்தது. அவரை கண்டுபிடித்த தனிப்படையினர், தங்களை சிலைஆர்வலர்கள் என்று கூறிக்கொண்டு அறிமுகமாகினர்.
பழங்கால பொருட்கள், சிலைகள் கிடைத்தால், எவ்வளவு பணம் கொடுக்கவும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதை உண்மை என்று நம்பிய சுரேந்திரன், சென்னைதிருவான்மியூர் ஜெயராம் தெருவில்உள்ள ரத்னேஷ் பாந்தியா என்றராஜஸ்தானை சேர்ந்தவரின் வீட்டுக்கு வருமாறு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, தனிப்படை போலீஸார் நேற்று அங்கு சென்றனர். அவர்களை பார்த்ததும் சந்தேகம் அடைந்த இடைத் தரகர் சுரேந்திரன்நழுவினார். அந்த வீட்டை போலீஸார் சோதனை செய்தபோது, சிவன், பார்வதி, அம்மன், திருவாச்சியுடன் கூடிய நடராஜர், ராமர், லட்சுமணர், சீதை, ஆஞ்சநேயர், நர்த்தன விநாயகர், புத்தர், நந்தி, குதிரை உட்பட பல கோடி ரூபாய் மதிப்பிலான தொன்மையான 15 உலோக சிலைகள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
ஆனால், ரத்னேஷ் பாந்தியாவிடம் இதுதொடர்பான ஆவணங்கள் எதுவும் இல்லை. இதனால், சிலைகள் அனைத்தும் தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் இருந்து திருடி, கடத்தி வரப்பட்டவை என்றமுடிவுக்கு வந்துள்ள போலீஸார், அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான இடைத் தரகர் சுரேந்திரனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT