Published : 20 Nov 2022 04:20 AM
Last Updated : 20 Nov 2022 04:20 AM
கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே நாட்டு வெடிகுண்டு வீசி மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (45). இவர் மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த17-ம் தேதி இரவு இவர் இரண்டு பேருடன் ராகவேந்திரா நகர், வெளிச்சம் மருத்துவமனை அருகே பேசிக் கொண்டிருந்தபோது 3 இரு சக்கர வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று வெங்கடேசன் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்கியது.
இதில் படுகாயமடைந்து கீழே விழுந்த வெங்கடேசனை அந்த கும்பல் பயங்கர ஆயுதங்களால் தலை மற்றும் கழுத்தில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியது. இதுகுறித்து மணிமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொலை கும்பலை தேடி வந்தனர்.
இந்நிலையில் மாடம்பாக்கத்தைச் சேர்ந்த முகமது இம்ரான்கான்(21), பிரவீன் குமார்(24), மணிமாறன்(25), முகமது ரியாசுதீன்(25), முகமது ரியாஸ்(32), முகமது யாகூப்(35), அகமது தர்ஷன்(25), தனுஷ்(26), முகம்மது சதாம் உசேன் (25), மோகன்ராஜ்(20) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
இவர்களில், முகமது சதாம் உசேன்(25), முகமது இம்ரான்கான்(21), முகமது ரியாசுதீன் ஆகியோர் சசோதரர்கள் ஆவர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் சமீபத்தில் மணிமங்கலம் பகுதியில் நடந்த இரட்டை கொலைக்கு பின்னால் வெங்கடேசன் மூளையாக செயல்பட்டதாகவும் இதனால் கொலை செய்ததாகவும் கைதானவர்கள் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.
கைதான 10 பேரில் 3 பேருக்கு கையும், ஒருவருக்கு காலும் உடைந்துள்ளது. போலீஸார் விரட்டிச் சென்று பிடிக்க முயன்றபோது தப்பிச் செல்லும்போது கீழே விழுந்ததில் கை, கால்கள் உடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர். அவர்களிடமிருந்து 3 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அவர்களிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT