Published : 16 Nov 2022 06:29 AM
Last Updated : 16 Nov 2022 06:29 AM
திருச்சி: திருச்சி மாவட்டம் முசிறி அருகே அந்தாரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன்(32). இவரும், இவரது நண்பர்களான சிறுகாம்பூர் கணேஷ் (28), செங்குடி மணிகண்டன்(23), தர்மா, சரண் ஆகியோரும் சேர்ந்து, கடந்தாண்டு நவம்பர் மாதம் 10-ம் வகுப்பு படித்த ஒரு மாணவியைக் கடத்திச் சென்று, அவருக்கு கட்டாயப்படுத்தி மது கொடுத்து, மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இதை செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்ததுடன், அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாகக் கூறி மிரட்டி, பலமுறை அம்மாணவியை வரவழைத்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளனர். இதனிடையே, சில மாதங்களுக்கு முன் உறவினர் ஒருவருடன் அச்சிறுமிக்கு திருமணம் நடைபெற்றது. இதுகுறித்த தகவலின்பேரில் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளும், குழந்தைகள் நலக்குழும அதிகாரிகளும் அச்சிறுமியை மீட்டு காப்பகம் ஒன்றில் தங்க வைத்துள்ளனர். அவர் தற்போது 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த சூழலில், இளைஞர்களால் செல்போனில் பதிவு செய்து வைக்கப்பட்டிருந்த பாலியல் வன்கொடுமை காட்சிகள் கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் பரவியது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை, குழந்தைகள் நலக்குழுமத்தில் முறையிட்டார். பாதிக்கப்பட்ட மாணவியும் கடந்த 12-ம் தேதி முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதனடிப்படையில் 6 பேர் மீதும் பாலியல் வன்கொடுமை, போக்சோ, ஆள்கடத்தல், தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்ளிட்டவற்றின் கீழ் நேற்று வழக்கு பதிவு செய்தனர். இவர்களில் ரங்கநாதன், மணிகண்டன், கணேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT