Published : 15 Nov 2022 07:49 AM
Last Updated : 15 Nov 2022 07:49 AM
சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.4.69 கோடி மதிப்புள்ள 10 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயில் இருந்து சென்னைக்கு ஒரு விமானம் நேற்று வந்தது. அதில் வந்த பயணிகளையும், அவர்களின் உடமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது 3 பயணிகள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்களை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அப்போது, 5 கிலோ 267 கிராம் தங்கத்தை அவர்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.2.34 கோடி ஆகும். மேலும், அபுதாபியில் இருந்து வந்த 2 ஆண் பயணிகளிடம் இருந்து ரூ.89.97 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 22 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
துபாய், கொழும்பு விமானங்கள்: அதேபோல, பாங்காக்கில் இருந்து வந்த ஓர் ஆண் பயணியிடம் இருந்து 476 கிராம் தங்கம், துபாயில் இருந்து வந்த 2 ஆண், 2 பெண் பயணிகளிடம் இருந்து 2 கிலோ 50 கிராம் தங்கம், கொழும்பில் இருந்து வந்த 2 பெண் பயணிகளிடம் இருந்து 730 கிராம் தங்கம் என மொத்தம் ரூ.1.45 கோடி மதிப்புள்ள 3 கிலோ 256 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT