இருளர் பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கு: 11 ஆண்டுகளுக்கு பிறகு காவல் ஆய்வாளர் ஸ்ரீனிவாசன் கைது

கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீனிவாசன் .
கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீனிவாசன் .
Updated on
1 min read

விழுப்புரம்: இருளர் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காவல் துறை ஆய்வாளர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்; அவரை நீதிமன்ற உத்தரவின் பேரில் போலீஸார் கைது செய்தனர்.

திருக்கோவிலூர் அருகே உள்ள தி.மண்டபம் கிராமத்தில் வசித்து வரும் பழங்குடியின இருளர் சமூதாயத்தைச் சேர்ந்த சிலரை கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருட்டு வழக்கு ஒன்றிற்காக திருக்கோவிலூர் போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக திருக்கோவிலூர் போலீஸார், தி.மண்டபம் கிராமத்தில் உள்ள பழங்குடி இருளர்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்குள் அத்துமீறி நுழைந்து சோதனை நடத்தியதோடு, விசாரணை என்ற பெயரில் பழங்குடியின இருளர் சமூதாயத்தைச் சேர்ந்த 4 பெண்களை அழைத்து சென்றனர்.

அப்போது ஒரு கர்ப்பிணி பெண் மற்றும் 17 வயது சிறுமி உள்ளிட்ட 4 பழங்குடியின இருளர் பெண்களை, காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று திருக்கோவிலூர் போலீஸார் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் திருக்கோவிலூர் காவல் ஆய்வாளர் ஸ்ரீனிவாசன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமநாதன், தலைமைக் காவலர் தனசேகர், காவலர்கள் கார்த்திகேயன், பக்தவச்சலம் உள்ள 5 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டத்தோடு, அவர்கள் மீது திருக்கோவிலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர், இவ்வழக்கு விழுப்புரத்தில் உள்ள வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணை நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில், பழங்குடியின இருளர் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொடர்புடைய போலீஸார் 4 பேர் ஏற்கெனவே ஜாமீன் பெற்று விட்ட நிலையில் தற்போது அரக்கோணம் நகர காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் ஸ்ரீனிவாசன் மட்டும் ஜாமின் பெறாமல் இருந்ததால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் கடந்த மே 16ம் தேதி நேரில் ஆஜரானார். அப்போது காவல் ஆய்வாளர் ஸ்ரீனிவாசனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி பாக்கியஜோதி உத்தரவிட்டார். இதனை அறிந்த காவல்ஆய்வாளர் ஸ்ரீனிவாசன் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினார்.

இதனையடுத்து இன்று வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் வேண்டி மனு தாக்கல் செய்தார். இம்மனுவை நீதிபதி பாக்கியஜோதி தள்ளுபடி செய்து ஸ்ரீனிவாசனை கைது செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து திருக்கோவிலூர் போலீஸார் காவல் ஆய்வாளர் ஸ்ரீனிவாசனை கைது செய்து, நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். இதனை தொடர்ந்து வருகின்ற 21ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் அவர் வேடம்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இவ்வழக்கில் 11 ஆண்டுகளுக்கு பிறகு காவல் ஆய்வாளர் ஸ்ரீனிவாசன் நீதிமன்ற உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in