Published : 11 Nov 2022 05:32 AM
Last Updated : 11 Nov 2022 05:32 AM

கர்நாடக கோயிலில் திருடப்பட்ட பழமையான திருமால் சிலை மீட்பு: திரைப்பட பாணியில் பிடித்த தமிழக சிலை கடத்தல் தடுப்பு போலீஸார்

பெங்களூரு: கடந்த 2017-ம் ஆண்டு க‌ர்நாடக மாநிலம் மண்டியாவில் உள்ள கோயிலில் இருந்த 600 ஆண்டுகள் பழமையான திருமால் சிலை காணாமல் போனது. இது 22.8 கிலோ எடையும், 58 செ.மீ உயரமும், 31 செ.மீ அகலமும் கொண்டது. இந்த சிலையை கோயிலில் இருந்து திருடிய அர்ச்சகர் ரூ.1 கோடிக்கு ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் நடராஜனுக்கு விற்றுள்ளார்.

அவர் இந்த சிலையை த‌மிழகத்துக்கு கடத்தும்போது கர்நாடக போலீஸார் காரை மடக்கி பிடித்தனர். அப்போது உரிய ஆவணங்கள் இல்லாததால் சிலையை பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் வழக்கறிஞர் நடராஜன் போலியாக‌ ஆவணங்கள் தயாரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதனால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நடராஜன் சிலையை கோபிசெட்டி பாளையத்துக்கு கொண்டுவந்துள்ளார். இதையடுத்து நடராஜன், திருமால் சிலையை சர்வதேச சந்தையில் ரூ.50 கோடிக்கு விற்க முயன்றார்.

இதனிடையே 2018-ம் ஆண்டு நடராஜன் காலமானார். இந்நிலையில் வழக்கறிஞர் நடராஜனின் ஜூனியர் பழனிசாமி இடைத்தரகர் ஒருவரின் உதவியுடன் சிலையை ரூ.33 கோடிக்கு கோவையில் விற்க முயற்சித்தார். இதுகுறித்து தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர்கள் ராஜேஷ், பாண்டியராஜன் ஆகியோர் மாறுவேடத்தில் கடந்த‌ 4-ம் தேதி இடைத்தரகர் மூலமாக வழக்கறிஞர் பழனிசாமியை அணுகினர்.

அப்போது 600 ஆண்டுகள் பழமையான அதிர்ஷ்ட திருமால் சிலை இருப்பதாகவும், ரூ.50 கோடி மதிப்பிலான அந்த சிலையை ரூ.33 கோடிக்கு விற்பதாகவும் கூறியுள்ளார்.
அப்போது உதவி ஆய்வாளர்கள் ராஜேஷ், பாண்டியராஜன் ஆகியோர் முதலில் சிலையை பார்க்க வேண்டும். பின்னர் அதற்கு ரூ.15 கோடி மட்டுமே தர முடியும் என பேரம் பேசியுள்ளனர். இதையடுத்து கடந்த நவம்பர் 9-ம் தேதி வழக்கறிஞர் பழனிசாமியின் வீட்டுக்கு வரவழைத்து சிலையை விற்க திட்டம் வகுக்கப்பட்டது.

இதையடுத்து உதவி ஆய்வாளர்கள் ராஜேஷ், பாண்டியராஜன் ஆகியோர் சிலை கடத்தல்காரர்களைப் போல மாறுவேடம் போட்டு வழக்கறிஞர் பழனிசாமியின் வீட்டுக்கு பணத்துடன் சென்றுள்ளனர். இடைத்தரகரிடம் ரூ.15 கோடி ரொக்கப்பணம் கொடுத்த பிறகு, சிலையை காட்டியுள்ளனர். சிலை கைமாறும் தருவாயில் மறைந்திருந்த தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் இளங்கோ, டிஎஸ்பி பாலமுருகன் உள்ளிட்ட போலீஸார் வழக்கறிஞர் பழனிசாமி, இடைத்தரகர் ஆகியோரை பிடித்தனர். அவர்களிடம் இருந்து திருமால் சிலையை மீட்டதுடன், இருவரையும் கைது செய்தனர். இதையடுத்து திருமால் சிலை கும்பகோணம் கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x