Published : 09 Nov 2022 07:03 AM
Last Updated : 09 Nov 2022 07:03 AM

தாம்பரம் | ஆள்மாறாட்டம் செய்து சொத்து அபகரிப்பு புகார்; பெண் கவுன்சிலர் தலைமறைவு: கணவரான திமுக வட்டச் செயலாளர் கைது

தாம்பரம்: சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் நாகலட்சுமி. இவரது தம்பி கிருஷ்ணமூர்த்தி. சென்னை மயிலாப்பூர் 124-வது வார்டு திமுக வட்ட செயலாளராக உள்ளார். இவரது மனைவி விமலா. சென்னை மாநகராட்சியின் 124-வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார். நாகலட்சுமி மற்றும் கிருஷ்ணமூர்த்தி குடும்பத்துக்கு சொந்தமாக பல கோடி ரூபாய் மதிப்பிலான குடும்பச் சொத்துகள் உள்ளதாக தெரிகிறது. அவை அனைத்தையும் இவர்களது பாட்டி உயில் எழுதி வைத்திருந்தார். இவர்களது தாய் இறந்த பிறகு உயிலை ரத்து செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு அனைத்து சொத்துகளும் நாகலட்சுமி கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றன.

இந்நிலையில் அந்த உயில் ரத்து செய்யப்பட்டதை மறைத்து தாழம்பூரில் உள்ள சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான 2 சொத்துகளை கிருஷ்ணமூர்த்தி அபகரிக்க முயன்றுள்ளார். இதற்காக குறிப்பிட்ட சொத்துக்கான பொது அதிகாரத்தை சகோதரி நாகலட்சுமி கொடுப்பது போல பத்திரம் தயாரித்துள்ளார். அதில் நாகலட்சுமி கையெழுத்து போடுவதற்கு பதிலாக தனது மனைவி விமலாவை கைரேகை வைக்க வைத்து சொத்தை திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து அபகரித்துள்ளார். இதுதவிர நாகலட்சுமிக்குச் சொந்தமான ரூ.20 கோடி சொத்துகளையும் அவர் அபகரிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

இதையறிந்த நாகலட்சுமி தாம்பரம் மாநகர காவல் ஆணையரக அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து திமுக வட்ட செயலாளரான கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், ஆள்மாறாட்டம் செய்து கைரேகை வைத்து மோசடியில் ஈடுபட்ட புகாரில் சென்னை மாநகராட்சி 124-வது வார்டு கவன்சிலர் விமலாவும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும் அவரை தேடி வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x