Published : 08 Nov 2022 11:15 PM
Last Updated : 08 Nov 2022 11:15 PM
சேலம்: சேலத்தில் குழந்தையை விற்பனை செய்ய வந்த மூவரை, மாறுவேடத்தில் மறைந்திருந்து கண்காணித்து, போலீஸார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையை விற்பனை செய்ய மூன்று லட்சம் ரூபாய் பேரம் பேசி, இளம் பெண்ணின் உறவினரான வளர்மதி மூலம் நேற்று குழந்தையை சேலத்துக்கு கொண்டு வந்தனர். பெண் குழந்தையை வாங்குவதற்காக, ஈரோட்டை சேர்ந்த இடைத்தரகர் லதா மற்றும் அவரது கணவர் மதியழகன் சேலம் வந்திருந்தனர். சேலம் சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா பகுதியில் குழந்தையை விலை கொடுத்து வாங்க வேண்டி லதா, மதியழகன் தம்பதியர் காத்திருந்தனர்.
சேலத்தில் குழந்தையை ரூ.3 லட்சம் பேரம் பேசி விற்பனை செய்யவுள்ளதாக, போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை போலீஸார் மாறுவேடத்தில் சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, குழந்தையை எடுத்து வந்த வளர்மதியிடம் இருந்து இடைத்தரகர்களான லதா மற்றும் அவரது கணவர் மதியழகன் இருவரும் குழந்தையை பெற முயற்சி செய்தனர். மாறுவேடத்தில் மறைந்திருந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தனிப்படை போலீஸார், மூவரையும் சுற்றி வளைத்து பிடித்து, பச்சிளம் குழந்தையை மீட்டு, அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.
இதுசம்பந்தமாக சேலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் லதா, மதியழகன், வளர்மதி மூவரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை விற்பனை சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் யார், யார் எத்தனை காலமாக குழந்தை விற்பனை நடந்து வருகிறது, இதற்கு முன்பாக வேறு குழந்தைகளை விற்பனை செய்த சம்பவம் நடந்துள்ளதா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் மூவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT