Published : 07 Nov 2022 11:18 PM
Last Updated : 07 Nov 2022 11:18 PM

திருப்பூர் | சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோ பதிவிட்ட பெண் கொலை - கணவர் கைது

திருப்பூர்: சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோ பதிவிட்ட மனைவியை கொலை செய்த கணவரை, திருப்பூர் மாநகர போலீஸார் கைது செய்தனர்.

திருப்பூர் செல்லம் நகரை சேர்ந்தவர் அமிர்தலிங்கம் (38). இவரது மனைவி சித்ரா (35). தம்பதியருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகளுக்கு திருமணாகிவிட்டது. சித்ரா அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்துவந்தார். அதேநேரம், சமூக வலைதளங்களான டிக்டாக் செயலி மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிடுவதில் தொடர்ந்து ஆர்வம் செலுத்திவந்துள்ளார்.

கணவர் அமிர்தலிங்கம் இதனை கண்டித்துள்ளார். மேலும் டிக்-டாக் செயலி மூலம் அறிமுகமான நபர்களுடன் சென்னைக்கு சென்று, சினிமாவில் சித்ரா நடிக்க சென்றதாக சொல்லப்படுகிறது. இதில் அமிர்தலிங்கம் மன உளைச்சலுக்கு ஆளானார். சென்னைக்கு சென்று சில மாதங்கள் சித்ரா தங்கி இருந்த நிலையில், கடந்த வாரம் திருப்பூருக்கு திரும்பினார்.

இதுதொடர்பாக தம்பதியரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று இரவு, தகராறு எழுந்ததில் கோபம் அடைந்த சித்ரா, அந்த பகுதியில் உள்ள தனது மூத்த மகள் வீட்டுக்கு சென்றுள்ளார். அக்கம்பக்கத்தினர் மற்றும் அவர்களது மகள்கள் இருவரையும் சமாதானப்படுத்தி உள்ளனர். தொடர்ந்து சித்ராவை வீட்டுக்கு செல்லுமாறு அனுப்பி வைத்தனர். இளைய மகள், அக்கா வீட்டிலேயே இரவு தங்கி உள்ளார்.

இதற்கிடையே மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் சித்ராவின் வீட்டுக் கதவு திறக்கவில்லை. இதில் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது, கழுத்தில் காயங்களுடன் சித்ரா கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். பின்னர் இதுகுறித்து மத்திய காவல் நிலையத்துக்கு அப்பகுதியினர் தகவல் அளித்தனர். அதன்பேரில் அங்கு சென்ற போலீஸார், சித்ராவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீஸ் நடத்திய விசாரணையில் துப்பட்டாவை கொண்டு சித்ராவின் கழுத்தை இறுக்கி கொலை செய்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து கொலைக்கு காரணமான கணவர் அமிர்தலிங்கத்தை மத்திய போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x