Published : 04 Nov 2022 07:44 AM
Last Updated : 04 Nov 2022 07:44 AM
சென்னை: தந்தை திட்டிய ஆத்திரத்தில் பெரம்பூர் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் போலீஸாரிடம் பிடிபட்டார். சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்த அவரை போலீஸார் பெற்றோரிடம் ஒப்படைத்து உரிய சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினர்.
பெரம்பூர் ரயில் நிலையத்தில் வெடிகுண்டுகளுடன் 4 பேர் சுற்றித் திரிவதாகவும், அவர்கள் சிறிது நேரத்தில் ரயில் நிலையத்தை வெடிகுண்டு மூலம் தகர்க்க உள்ளதாகவும் இளைஞர் ஒருவர் காவல் கட்டுப்பாட்டு அறையை போனில் தொடர்பு கொண்டு நேற்று முன்தினம் தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கட்டுப்பாட்டு அறை போலீஸார் உடனடியாக இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்குத் தெரிவித்தனர்.
இதையடுத்து ரயில்வே போலீஸார், ரயில்வே பாதுகாப்புப் படையினர் மற்றும் செம்பியம் காவல் நிலைய போலீஸார், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்களுடன் விரைந்து பெரம்பூர் ரயில்நிலையம் முழுவதும் சோதித்தனர். பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் வெடிபொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, போன் மூலம் கிடைத்த தகவல் புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து அழைப்பு விடுத்த நபர் யார் என்பது குறித்து செம்பியம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், மிரட்டல் விடுத்தது அம்பத்தூரைச் சேர்ந்த பிரவீன் (24) என்பது தெரியவந்தது. உடனடியாக பிரவீன் வீட்டுக்குச் சென்ற போலீஸார் அவரைப் பிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது அவர் போதைக்கு அடிமையானவர் என்பதும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போலவும் தெரிந்தார். மேலும், பிரவீன் தன்னை யாரோதுரத்துவதுபோல் தானே கற்பனைசெய்துகொண்டு தனது பெற்றோரிடம் தொடர்ந்து முறையிடுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினமும் அதேபோல தனது தந்தையிடம் தன்னை 4 பேர் கத்தியுடன் துரத்துவதாகக் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த அவரது தந்தைபிரவீனை திட்டியுள்ளார். இதனையடுத்து தந்தை திட்டிய ஆத்திரத்தில் பிரவீன் காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு தவறான தகவல் கொடுத்துள்ளார் என போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து பிரவீனின் பெற்றோரை அழைத்து அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க போலீஸார் அறிவுறுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT