Published : 03 Nov 2022 04:15 AM
Last Updated : 03 Nov 2022 04:15 AM
சேலம்: சேலத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட ரவுடியை கடத்திச் சென்ற கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
சேலம், கோரிமேடு அருகே உள்ள பிருந்தாவன் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி (36). இவர் அழகாபுரம் காவல் நிலையத்தில் ரவுடி பட்டியலில் உள்ளார். ராஜாராம் நகரை சேர்ந்த இவரது நண்பர் பிரவீன் குமார். இவர்கள் இருவரும் நேற்று முன் தினம் இரவு கோரிமேடு பகுதியில் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த 10 பேருக்கும் மேற்பட்டோர், பூபதி மற்றும் பிரவீன் குமாரை காரில் கடத்திச் சென்றனர். சேலம் ஐந்து ரோடு பகுதிக்கு வந்தபோது, மர்ம கும்பல் காரை நிறுத்தி, மற்றொருவரை ஏற்ற முயன்றனர். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, பிரவீன்குமார் காரில் இருந்து தப்பி ஓடி கூச்சலிட்டார். கடத்தல் கும்பல் உடனடியாக பூபதியை மட்டும் காரில் கடத்திச் சென்றது.
தகவல் அறிந்து வந்த பள்ளப்பட்டி போலீஸார் பிரவீன்குமாரை மீட்டு விசாரணை நடத்தினர். கோரிமேட்டில் உள்ள பூபதி வீட்டுக்கு அருகே நின்று பேசிக் கொண்டிருந்தபோது, இருவரையும் தாக்கிய கும்பல் காரில் கடத்தியதும், வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதைக் கூறி பூபதியை கும்பல் தாக்கியதும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.
இது சம்பந்தமாக அழகாபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து , பூபதியை காரில் கடத்திச் சென்ற கும்பலை தேடி வருகின்றனர். ரவுடி பூபதி ஏற்கெனவே சிலரால் கடத்தப்பட்டு போலீஸாரால் மீட்கப்பட்டவர். மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி பலரிடமிருந்து பல லட்சம் ரூபாய் வாங்கி மோசடியில் ஈடுபட்டதால், பூபதி கடத்தப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மேலும், கடத்தப்பட்ட பகுதியில் இருந்து கார் சென்ற வழித்தடங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவைக் கொண்டு, கடத்தல் கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT