Published : 30 Oct 2022 07:14 AM
Last Updated : 30 Oct 2022 07:14 AM
மும்பை: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீவிரவாத தடுப்புக் குழு சார்பில், தீவிரவாத செயல்களுக்கு புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப் படுவதைத் தடுப்பது தொடர்பான சிறப்புக் கூட்டம் மும்பையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 15 நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்கள், தூதரக அதிகாரிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், 26/11 மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு உள்ள பங்கு குறித்து இந்திய உளவுத் துறை உயர் அதிகாரி பங்கஜ் தாக்குர் ஆதாரத்துடன் விரிவாக எடுத்துரைத்தார்.
அப்போது மும்பை தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டிய பாகிஸ்தான் தீவிரவாதி சஜித் மிர், தாக்குதல் நடந்தபோது சக தீவிரவாதிகளுக்கு உத்தரவு பிறப்பித்து பேசிய குரல் பதிவு (ஆடியோ) ஒலிபரப்பப்பட்டது.
அந்த குரல் பதிவில், 2008-ம்ஆண்டு நவம்பர் 26-ம் தேதி மும்பையின் சபாத் இல்லத்தில் புகுந்த தீவிரவாதிகளுக்கு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாபராபாத் நகரிலிருந்தபடி லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த சஜித் மிர் உத்தரவு பிறப்பிக்கிறார்.
வெளிநாட்டினர் உட்பட 166 பேர் உயிரிழப்புக்குக் காரணமான மும்பை தாக்குதலுக்கான சதித் திட்டத்துக்கு சஜித் மிர்தான் தலைமை வகித்துள்ளார். அத்துடன் இந்த தாக்குதலுக்கு உளவுபார்த்தவர்கள் மற்றும் செயல்படுத்தியவர்களை இவர்தான் வழிநடத்தி உள்ளார்.
ஜெய்சங்கர் பேச்சு
2-வது நாள் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் மத்தியவெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது: தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக ஆசியா, ஆப்பிரிக்க காவில் தீவிரவாதிகளின் செயல்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன. மனித குலத்தின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக தீவிரவாதம் நீடிக்கிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளுக்காக இந்தியா சார்பில் ரூ.4.11 கோடி நிதியுதவி வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT