Published : 29 Oct 2022 06:24 AM
Last Updated : 29 Oct 2022 06:24 AM

தூத்துக்குடி | விசாரணைக்காக பெண்ணை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தாக்கிய வழக்கில் ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி, ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே விசாரணைக்காக பெண்ணை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தாக்கியது தொடர்பாக, ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி, காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட வன்கொடுமை தடுப்புச் சட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள காசிலிங்கபுரத்தை சேர்ந்தவர் பாப்பா(49). இவரது கணவர் இறந்துவிட்டார். கடந்த 2.11.2007 அன்று, அந்த பகுதியில் நடந்த திருட்டு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அப்போதைய புளியம்பட்டி காவல் ஆய்வாளர் விமல்காந்த், உதவி காவல் ஆய்வாளர் காந்திமதி பாப்பாவை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

விரல்களில் எலும்பு முறிவு: அப்போது போலீஸார் தாக்கியதில் பாப்பாவின் 2 கைகளிலும் விரல்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.இது தொடர்பான விசாரணையில் பாப்பாவை போலீஸார் தாக்கியதும், அவரது வீட்டை சேதப்படுத்தியதும் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரிநெல்லை வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் பாப்பாமனுத் தாக்கல் செய்தார். இதற்கிடையே இவ்வழக்கில் தொடர்புடைய காவல் ஆய்வாளர் விமல்காந்த், ஏடிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்று பின்னர் ஓய்வுபெற்று சென்னையில் வசித்து வருகிறார். உதவி ஆய்வாளர் காந்திமதி, கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் காவல் நிலைய ஆய்வாளராக தற்போது பணிபுரிகிறார். பாப்பா தொடர்ந்த வழக்குதூத்துக்குடி மாவட்ட வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

தலா ரூ.26 ஆயிரம் அபராதம்: வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், குற்றம் சாட்டப்ட்ட விமல்காந்த், காந்திமதிக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.26 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அபராத தொகையில் ரூ.50 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட பாப்பாவுக்கு வழங்கவும் உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x