Published : 28 Oct 2022 04:35 AM
Last Updated : 28 Oct 2022 04:35 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியை அடுத்த நீலமங்கலத்தைச் சேர்ந்த புருஷோத்தமன்(28) என்பவரும், கடலூர் மாவட்டம் நல்லூரை அடுத்த நகர் பகுதியைச் சேர்ந்த ஐஸ்வர்யாவுக்கும் (22) கடந்த 2018-ம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து நீலமங்கலத்தில் புருஷோத்தமன் குடும்பத்தினரோடு, ஐஸ்வர்யா வசித்து வந்தார். புருஷோத்தமன் வீட்டில் இல்லாத போது, அவரது தந்தை பழனிவேல், ஐஸ்வர்யாவிடம், வீட்டிலிருந்து நகை பணம் வாங்கி வா என வற்புறுத்துவாராம். கருவுற்று இருந்த ஐஸ்வர்யா இதுகுறித்து கணவரிடம் கூறியபோது, அவரும் அதை பொருட்படுத்தவில்லையாம்.
இதனால் மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவனையில் அனுமதித்தபோது அங்கு சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இது குறித்து ஐஸ்வர்யாவின் தாய், அம்சவள்ளி அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீஸார் வழக்கு பதிவு செய்து, புருஷோத்தமன் மற்றும் அவரது தந்தை பழனிவேல் ஆகியோரை கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT