Published : 22 Oct 2022 03:55 PM
Last Updated : 22 Oct 2022 03:55 PM
அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே 2 பெண்கள் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். நகைகளுக்காக கொல்லப்பட்டனரா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ஜெயங்கொண்டம் அடுத்த பெரியபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தண்டபாணி மனைவி கண்ணகி (50). கலைமணி மனைவி மலர்விழி (29). இருவரும் அருகே உள்ள தைலமரக்காட்டில் உணவு காளான்கள் பறிக்க இன்று (அக்.22) காலை சைக்கிளில் சென்றுள்ளனர். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், வீட்டில் உள்ளோர் மலர்விழிக்கு போன் செய்து பார்த்துள்ளனர். அப்போது, போன் சுவிட்ச் ஆஃப் என கூறியதையடுத்து, அவர்கள் சென்ற பகுதிக்கு குடும்பத்தார் சென்றுள்ளனர்.
அங்கு தைலமரக்காட்டின் சாலையோரத்தில் சைக்கிள் நின்றுள்ளது. இதையடுத்து, காட்டினுள் சென்று பார்த்தபோது, மேற்கண்ட 2 பெண்களும் முகம் சிதைந்த நிலையில், அறிவாளால் வெட்டப்பட்டு இறந்து கிடந்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஜெயங்கொண்டம் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அவர்கள் அணிந்திருந்த தாலி சங்கிலி திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. நகைக்காக கொலை செய்யப்பட்டனரா அல்லது வேறு ஏதும் காரணம் உண்டா என போலீஸார் விசாரிக்கின்றனர்.
இதனிடையே இருவரது உடல்களும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சம்பவ இடத்தில் மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் கொண்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT