Published : 21 Oct 2022 09:00 AM
Last Updated : 21 Oct 2022 09:00 AM
குழந்தை திருமணம் தொடர்பான புகாரில், முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ள சிதம்பரம் தீட்சிதர்கள் 49 பேரை கைது செய்யக்கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரம் தீட்சிதர்கள் சிலர் குழந்தை திருமணங்களை செய்துவைத்ததாக வந்த புகார்களின் அடிப்படையில், சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸார் 2 வழக்குகளும், சிதம்பரம் நகர்போலீஸார் ஒரு வழக்கும் பதிவுசெய்து இதுவரையில் 8 தீட்சி தர்களை கைது செய்துள்ளனர்.
இதைக் கண்டித்து தீட்சிதர்கள் பலர் சில தினங்களுக்கு முன் நடராஜர் கோயில் அருகே சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இது குறித்து சிதம்பரம் நகர போலீஸார் கண்ணன் தீட்சிதர் உள்ளிட்ட 51 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் அவர்கள் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி ஏ.டிஜெகதீஷ் சந்திரா முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், இந்த சம்பவம் தொடர்பாக மொத்தம் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த 4 வழக்குகளில் இந்த 51 பேர் எந்த வழக்குடன் தொடர்புடையவர்கள் என்ற விவரம் தெரியவில்லை. ஏற்கெனவே 2 பேர் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது, என தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா ஆஜராகி, போலீஸார் பல வழக்குகளைப் பதிவு செய்துள்ளதால் மனுதாரர்கள் அனைவருக்கும் முன்ஜாமீன் வழங்க வேண்டுமென வாதிட்டார். அதையடுத்து நீதிபதி, ‘மனு தாரர்கள் தங்களை எந்த வழக்கில் போலீஸார் தேடி வருகின்றனர் என்ற விவரங்களுடன் புதிதாக மனு தாக்கல் செய்ய வேண்டும்.
மாவட்ட நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட 2 பேர் தவிர்த்து எஞ்சிய 49 தீட்சிதர்களை வரும் நவ.1 வரை கைது செய்யக்கூடாது, என அறிவுறுத்தி விசாரணையை நவ.1-க்கு தள்ளி வைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT