Published : 19 Oct 2022 04:30 AM
Last Updated : 19 Oct 2022 04:30 AM

அருப்புக்கோட்டையில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் மர்ம மரணம்: காப்பக ஊழியர்கள் 3 பேரை கைது செய்த சிபிசிஐடி

விருதுநகர்

அருப்புக்கோட்டையில் மன நலம் பாதிக்கப்பட்ட இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக மனநலக் காப்பக ஊழியர்கள் 3 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.

அருப்புக்கோட்டை எம்.டி.ஆர். நகரில் ஒரு வீட்டில் சுவர் ஏறிக் குதித்து உள்ளே சென்றதாக கடந்த மாதம் 9-ம் தேதி செம்பட்டியைச் சேர்ந்த தங்கப்பாண்டியன்(33) என்பவரைப் பிடித்து, அப்பகுதி மக்கள் அருப்புக்கோட்டை நகர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது. அதையடுத்து, அருப்புக்கோட்டை ராமானுஜபுரத்தில் உள்ள தனியார் மன நலக் காப்பகத்தில் தங்கப்பாண்டியன் சேர்க்கப்பட்டார்.

அவரை அன்று இரவு அருப்புக்கோட்டை நகர் போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்னர் இரவில் மீண்டும் அவரை காப்பகத்தில் ஒப்படைத்தனர். மறுநாள் அதிகாலை அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரை மனநலக் காப்பகத்தினர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிறிது நேரத்தில் தங்கப்பாண்டியன் உயிரிழந்தார்.

ஆனால், போலீஸார் தாக்கியதால்தான் தங்கப்பாண்டியன் உயிரிழந்ததாக அவரது மனைவி கோகிலா, உறவினர்கள் புகார் தெரிவித்தனர். இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். மேலும் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு தங்கப்பாண்டியனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இதுகுறித்து சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் சாவித்திரி தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது காப்பகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தபோது, மன நலக் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட தங்கப்பாண்டியனின் கை, கால் களை கட்டி அவர் மீது சிலர் ஏறி அமர்ந்து கொடுமைப்படுத்தியது தெரியவந்தது.

அதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக மனநலக் காப்பகத்தில் பணியாற்றி வந்த சிவகாசியைச் சேர்ந்த வினோத்குமார்(24), கல் குறிச்சியைச் சேர்ந்த ஆகாஷ் என்ற ராஜேந்திரகுமார்(21), சுப்பிரமணி(22) ஆகியோரை நேற்று கைது செய்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x