Published : 17 Oct 2022 02:00 AM
Last Updated : 17 Oct 2022 02:00 AM
போபால்: கூகுள் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வரும் நபரை வலுக்கட்டாயமாக கடத்தி, பெண் ஒருவருடன் கட்டாய திருமணம் செய்யப்பட்டு, மிரட்டப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட நபர் போலீசில் புகார் அளித்ததன் மூலம் இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று இந்த சம்பவம் நடந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் உள்ள கம்லா நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த குற்ற செயல் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட நபரின் பெயர் கணேஷ் சங்கர். அவர் பெங்களூருவில் உள்ள கூகுள் அலுவலகத்தில் மூத்த மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். அவர் ஷில்லாங் நகரில் உள்ள ஐஐஎம் கல்விக் கூடத்தில் எம்பிஏ படித்துள்ளார்.
அங்கு அவருக்கு போபால் பகுதியை சேர்ந்த சுஜாதா என்பவர் அறிமுகமாகி உள்ளார். அவரது அழைப்பின் பேரில் போபாலுக்கு கணேஷ் சங்கர் சென்றுள்ளார். அங்கு அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, இருட்டான ஒரு பகுதியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். மேலும், சுஜாதா மற்றும் அவரது குடும்பத்தினர் சில போட்டோக்களை எடுத்துள்ளனர். அதை காட்டி அவரிடம் 40 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டி உள்ளனர். அதை செய்ய தவறினால் குற்ற வழக்கில் சிக்க வைக்கப்படுவார் எனவும் மிரட்டி உள்ளனர்.
அங்கிருந்து தப்பிய அவர் சுஜாதா, அவரது தந்தை, சகோதரர் மற்றும் மாமாவின் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசாரும் அதன் பேரில் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதோடு அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையையும் போலீசார் மேற்கொண்டு வருவதாக தகவல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT