Published : 16 Oct 2022 12:06 AM
Last Updated : 16 Oct 2022 12:06 AM
கரூர்: கரூரில் குடிபோதையில் லாரியை ஓட்டி விபத்து ஏற்படுத்தி 2 பேர் உயிரிழந்து, 8 பேர் காயமடைய ஓட்டுநருக்கு கரூர் முதன்மை குற்றவியல் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.31,500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
கரூர் மாரியம்மன் கோயில் கம்பம் ஆற்றில் விடும்விழா கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் ஜவஹர் பஜார் வழியாக நடந்து சென்றுக்கொண்டிருந்தப் போது அவ்வழியே குடிபோதையில் லாரியை ஓட்டி வந்த கரூர் திருகாம்புலியூரை சேர்ந்த செல்வக்கனி (42) கூட்டத்தில் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். 5 பேர் லேசான காயமடைந்தனர். இதுதொடர்பாக கரூர் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து செல்வகனியை கைது செய்தனர்.
இவ்வழக்கு முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்த வந்தநிலையில் நீதிபதி ராஜலிங்கம் இன்று (அக். 15) தீர்ப்பு வழங்கினார். அதில், 2 பேர் உயிரிழந்ததற்கு தலா 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை, தலா ரூ.5,000 அபராதம், 3 பேருக்கு கொடுங்காயத்தை ஏற்படுத்தியதற்கு தலா 4 மாதம் சிறைத்தண்டனை, தலா ரூ.3,000 அபராதம், 5 பேருக்கு காயம் ஏற்படுத்தியதற்கு தலா ரூ.500 என ரூ.2,500 அபராதம், குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதற்கு 6 மாத சிறைத் தண்டனை ரூ.10,000 அபராதம் விதித்தும் சிறைத் தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து செல்வகனி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT