Published : 14 Oct 2022 03:59 PM
Last Updated : 14 Oct 2022 03:59 PM

ஆஸ்திரேலியா | கத்தியால் 11 முறை குத்தப்பட்ட இந்திய மாணவருக்கு தீவிர சிகிச்சை; தாக்கியவர் கைது

சிட்னி: ஆஸ்திரேலிய நாட்டில் இந்தியாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கொடூரத் தாக்குதலுக்கு ஆளானார். அவர் கத்தியால் 11 முறை குத்தப்பட்டுள்ளார். இந்த தாக்குதலில் அவர் பலத்த காயம் அடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அவர் சுய நினைவுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அவருக்கு அங்குள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாக்குதலை மேற்கொண்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு ஆளான மாணவர், இந்தியாவின் ஆக்ரா பகுதியை சேர்ந்தவர். 28 வயதான அவரது பெயர் ஷூபம் கார்க். சிட்னியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இயந்திர பொறியியல் துறையில் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவராக உள்ளார். கடந்த செப்டம்பரில்தான் மேற்படிப்புக்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அவர் ஐஐடி மெட்ராஸில் முதுகலை பட்டம் முடித்தவர்.

அவரை 27 வயதான டேனியல் நார்வுட் என்றவர் தாக்கி உள்ளார். இந்தச் சம்பவம் கடந்த வாரம் நடந்துள்ளது. இரவு 10.30 மணி அளவில் பசிபிக் ஹைவே பகுதியில் ஷூபம் நடந்து சென்றபோது தாக்குதல் நடத்துள்ளது. அவரை மிரட்டி பணம் மற்றும் செல்போன் பறிக்க முயன்றுள்ளார் நார்வுட் என்ற நபர். ஆனால், அவர் மறுக்கவே வயிற்றுப் பகுதியில் சரமாரியாக குத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

போலீசார் தனிப்படை அமைத்து நார்வுட்டை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். தாக்குதலுக்கு ஆளான ஷூபத்திற்கு இந்திய தூதரகம் உதவி வருகிறது. அவரது குடும்பத்தின் விரைந்து ஆஸ்திரேலியாவுக்கு வரும் வகையில் விசா நடைமுறையை ஆஸ்திரேலியா மேற்கொண்டு வருகிறது. இது இனவெறி ரீதியிலான தாக்குதலாக இருக்கலாம் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x