Published : 10 Oct 2022 04:08 PM
Last Updated : 10 Oct 2022 04:08 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் தொடரும் செயின் பறிப்பு சம்பவங்களால் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். சென்னையைச் சேர்ந்த கும்பல் இதில் ஈடுபட வாய்ப்புள்ளதாக போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடக்கத் தொடங்கியுள்ளன. அண்மைய சம்பவம் ஒன்று: புதுச்சேரி காமராசர் நகரை சேர்ந்தவர் டெல்லி குமார். இவரது மனைவி பிரபாவதி. வெங்கட்டாநகரில் உள்ள அம்மாவை பார்க்க, பிரபாவதி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள், பிரபாவதி கழுத்தில் கிடந்த செயினை பறித்துச் சென்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து டெல்லிகுமார், பெரியகடை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வெங்கட்டா நகரில் இருந்த சிசிடிவி கேமரா காட்சியை போலீஸார் ஆய்வு செய்தனர்.
சுமார் 20 வயது மதிக்கத்தக்க இரு இளைஞர்கள் இதில் ஈடுபட்டதும், ஒருவர் ஹெல்மெட்டும், பின்னால் அமர்ந்திருப்பவர் முகக்கவசம் அணிந்திருந்ததும் தெரிந்தது. முதல்கட்ட விசாரணையில் இந்த இளைஞர்கள் அதிக சிசி கொண்ட டூவீலரில் சுற்றுலா பயணிகள் போல் புதுச்சேரி வந்து நகைகளை பறிக்கும் சென்னை கும்பலாக இருக்க வாய்ப்புள்ளது என தெரியவந்துள்ளது. அவர்களை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர். புதுச்சேரி நகர பகுதியில் ஒரே வாரத்தில் நடந்த நான்காவது செயின் பறிப்பு என்பதும், பெண்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள சூழலும் நிலவுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT