Published : 08 Oct 2022 07:13 AM
Last Updated : 08 Oct 2022 07:13 AM
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் நடந்த கொலை தொடர்பாக தேடப்பட்ட ராக்கெட் ராஜா திருவனந்தபுரத்தில் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே மஞ்சங்குளத்தை சேர்ந்த முத்து மகன் சாமித்துரை (26) என்பவர் முன்விரோதம் காரணமாக கடந்த ஜூலை 29-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நாங்குநேரி போலீஸார் விசாரணை மேற்கொண்டு நடுநந்தன்குளத்தை சேர்ந்த விக்டர் (23), கோதைசேரி முருகேசன் (23), தச்சநல்லூர் தாராபுரம் சஞ்ஜிவ்ராஜ் (25), ஸ்ரீராம் குமார் (21), ஆனந்த் (21), ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி ராஜசேகரன் (30), வடக்கு தாழையூத்து பிரவீன் ராஜ் (30), கோவில்பட்டி ராஜ்பாபு (30), எட்டயபுரம் ஆனந்தராஜ் (24) மற்றும் ஜேக்கப் ஆகிய 10 பேரை கைது செய்தனர்.
தென்மாவட்டங்களில் பிரபல ரவுடியும், பனங்காட்டுப்படை கட்சியின் தலைவருமான திசையன்விளை ஆனைகுடியைச் சேர்ந்த ராக்கெட் ராஜா என்பவரை, இந்த கொலை வழக்கில் போலீஸார் தேடி வந்தனர். திருவனந்தபுரத்தில் அவர் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. நாங்குநேரி ஏஎஸ்பி ரஜத் ஆர்.சதுர்வேதி, டிஎஸ்பி ஆனந்தராஜ் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீஸார், திரு வனந்தபுரத்தில் தலைமறைவாக இருந்த ராக்கெட் ராஜாவை நேற்று கைது செய்தனர். அவரை திருநெல்வேலிக்கு அழைத்துவந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ராக்கெட் ராஜா மீது 5 கொலை வழக்குஉட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT