Published : 02 Oct 2022 04:52 AM
Last Updated : 02 Oct 2022 04:52 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் (50). இவர் கடந்த 28-ம் தேதி அவரது விவசாய தோட்டத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தின் அருகே மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
தகவல் அறிந்து அங்கு சென்ற கெலமங்கலம் போலீஸார், லட்சுமணனின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.
போலீஸ் விசாரணையில் தெரியவந்த முதல்கட்ட தகவலின்படி, லட்சுமணனின் தோட்டத்தில் புதையல் இருப்பதாகவும், அதை எடுக்க நரபலி கொடுக்க வேண்டும் எனவும் தருமபுரியைச் சேர்ந்த மந்திரவாதி ஒருவர் கூறியுள்ளார். இதை நம்பிய லட்சுமணன், அதே ஊரைச் சேர்ந்த தனது நண்பர் மணியிடம் தெரிவித்துள்ளார். மேலும் இருவரும் மேச்சேரியைச் சேர்ந்த ராணி என்ற உறவினர் பெண்ணை அமாவாசை அன்று நரபலி கொடுக்க திட்டமிட்டுள்ளனர்.
ஆனால், ராணி வராததால் ஏமாற்றமடைந்த இருவரும், கடந்த 28-ம் தேதி அதிகாலை தோட்டத்தில் பள்ளம் தோண்டி கோழியை பலியிட்டு பூஜை செய்தனர். அப்போது, லட்சுமணன், மணியை தாக்கி கொலை செய்ய முயன்றபோது, உஷார் அடைந்த மணி கீழே கிடந்த கட்டையை எடுத்து லட்சுமணனை தாக்கியுள்ளார். இதில், லட்சுமணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து, ஏற்கெனவே நரபலி கொடுக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் லட்சுமணனின் உடலை வைத்து புதையல் வரும் என காத்திருந்த மணி, அதிகாலையில் மக்கள் நடமாட்டம் அதிகரிக்கவே லட்சுமணனின் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றது தெரிந்தது. இதைத் தொடர்ந்து மணியை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT