Published : 27 Sep 2022 06:53 AM
Last Updated : 27 Sep 2022 06:53 AM

ரூ.100 கூடுதல் சம்பளம் பெற்றதால் ஆத்திரம்: தொழிலாளி கொலையில் நண்பர்கள் 3 பேர் கைது

சென்னை: தொழிலாளி ஒருவர் 3-வது மாடியிலிருந்து தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக 3 பேரைக் கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வேளச்சேரி, தண்டீஸ்வரம், 10-வது தெருவில், தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. அங்கு திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளி ஆனந்தன் (22) மாடியிலிருந்து தவறி விழுந்து பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து வேளச்சேரி போலீஸார் விசாரணை நடத்தினர். இதில்,ஆனந்தன் மாடியிலிருந்து தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: உயிரிழந்த ஆனந்தனுடன் சென்ட்ரிங் தொழிலாளர்களான திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் (25), பிரசாந்த் (25), கொத்தனார் சீனிவாசன் (25) ஆகியோர் வேலை செய்துள்ளனர். அப்போது மேஸ்திரி வேலை செய்த ஆறுமுகம் என்பவர், ஆனந்தனை விட சக்திவேல் மற்றும் பிரசாந்துக்கு 100 ரூபாய் கூலி குறைவாகக் கொடுத்துள்ளார். இதனால், அவர்களுக்குள் ஒரு வாரமாகத் தகராறு இருந்துள்ளது.

இந்நிலையில், ஆனந்தனை வேளச்சேரி, தண்டீஸ்வரம்பகுதிக்கு சக்திவேல், பிரசாந்த், அவர்களது நண்பர் சீனிவாசன் ஆகியோர் அழைத்து வந்து 3 மாடியில் வைத்து மது அருந்தியுள்ளனர். பின்னர் ஆனந்தனுக்கு மது போதைஅதிகரித்த நிலையில், பக்கத்திலிருந்த தென்னை மரத்தில் தேங்காய் இருப்பதாகக் காட்டியுள்ளனர். அதை அவர் பார்த்துக் கொண்டிருந்தபோது 3 பேரும்சேர்ந்து ஆனந்தனை மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து புகாருக்குள்ளான 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகிறோம் என்றனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x