Published : 16 Sep 2022 03:26 PM
Last Updated : 16 Sep 2022 03:26 PM
சென்னை: கோவையில் கடந்த 2018-ம் ஆண்டு, 216 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் கோவை சீரநாயக்கன்பாளையம் பிரதான சாலையில் உள்ள வீரபத்திர சாமி கோயில் அருகே ஆர்.எஸ்.புரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு அதிவேகமாக வந்த காரை வழிமறித்து சோதனையிட்டனர். அந்த காரில் இருந்து 216 கிலோ கஞ்சா மற்றும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்க பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அந்த காரில் வந்த இருளாண்டி, தர்மர், பந்தீஸ்வரன், சதீஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த கோவை போதைப்பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், 4 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பளித்தது. தண்டனையை எதிர்த்து இருளாண்டி உள்ளிட்ட 4 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், "வழக்கின் சாட்சியங்களில் முன்னுக்குப் பின் முரண்பாடுகள் உள்ளன. விசாரணை நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை. எனவே, தண்டனையை ரத்து செய்ய வேண்டும்" என வாதிடப்பட்டது. அப்போது அரசுத் தரப்பில், "அனைத்து நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்பட்டது" என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 216 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட இந்த வழக்கில் சாட்சியங்களில் உள்ள சிறு முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி, வழக்கு நிரூபிக்கப்படவில்லை எனக் கூற முடியாது எனக் கூறி, 4 பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து, மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT