Published : 08 Sep 2022 01:18 PM
Last Updated : 08 Sep 2022 01:18 PM

பாலியல் குற்றம் செய்த இளைஞர்களை அரசு அணுகுவது எப்படி? - உயர் நீதிமன்றம் யோசனை

மதுரை மாவட்டம், கருப்பாயூரணியைச் சேர்ந்த கந்தன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

எனது மகன் லட்சுமணன், ராஜபாளையம் போலீஸாரால் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டார். தற்போது குண்டர் சட்டத்தின்கீழ் மதுரை மத்திய சிறையில் உள்ளார். இதை ரத்து செய்து விடுவிக்குமாறு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இம்மனுவை நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, என் ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோர் விசாரித்தனர். அரசு கூடுதல் வழக்கறிஞர் திருவடிக்குமார் ஆஜராகி, வழக்கின் விசாரணை முடிந்து நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: குண்டர் சட்டம் தொடர்பான உத்தரவு நகல் 3 நாள் தாமதமாக வழங்கப்பட்டுள்ளது. மனுதாரரின் கோரிக்கை மனு அரசால் 21 நாட்கள் தாமதமாக பரிசீலிக்கப்பட்டுள்ளது. எனவே, மனுதாரர் மகனை குண்டர் சட்டத்தில் கைது செய்த விருதுநகர் ஆட்சியரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

தகவல் தொழில்நுட்பம் டீன் ஏஜ் வயதினரின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மனுதாரர் மகனுக்கு 18 வயதும், மற்றவர்கள் மைனராகவும் உள்ளனர். புத்தகத்தை கையில் சுமக்க வேண்டியவர்கள், தற்போது பாலியல் குற்றவாளிகள் ஆகியுள்ளனர்.

மொபைல்போன் மூலம் எளிதில் பாலியல் ஆபாசத்தை பார்த்து வெளிப்படுத்தும் சூழல் உள்ளது. ஹார்மோன் தூண்டுதலால் வழிதவறி தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர். இவர்களை போன்றவர்களை சிறையில் அடைக்கும்போது, அவர்களது மனரீதியான வக்கிரத்தை போக்க முயற்சி எடுக்க வேண்டும். இதற்கான தொழில்நுட்ப வழிகாட்டுதலை தமிழக அரசு உருவாக்க வேண்டும்.

பாலியல் குற்றத்தில் ஈடுபட்டு சிறையிலிருந்து வெளிவரும் ஒவ்வொருவருக்கும் மனநல ஆலோசனைகளை வழங்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் இளம்வயதினர் வாழ்க்கையை இழக்க நேரிடும் என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x