Published : 02 Sep 2022 07:01 PM
Last Updated : 02 Sep 2022 07:01 PM

ஹரியாணா அதிர்ச்சி: பாலியல் துன்புறுத்தல் - ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண் உயிரிழப்பு

ஃபத்தேஹாபாத்: ஓடும் ரயிலில் 9 வயது மகனுடன் தனியாக பயணித்த 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். தன்னைக் காத்துக்கொள்ள போராடிய அந்தப் பெண், ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்ட சம்பவம், ஹரியாணாவை உலுக்கியுள்ளது.

இந்தக் கொடுங்குற்றச் செயல் நடந்தது, ஃபத்தேஹாபாத் நகருக்கு ரயில் வந்த பிறகுதான் தெரியவந்துள்ளது. அந்தப் பெண்ணின் கணவர் தங்களது மகன் தனியாக ரயில் பெட்டிக்குள் அழுது கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். ‘அம்மா எங்கே?’ என மகனிடம் அவர் கேட்டபோதுதான் இந்தச் சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது.

அந்தப் பெண் பயணித்த ரயில் பெட்டியில் அவரது மகன், அவர் மற்றும் வேறொரு நபர் என மூவர் மட்டுமே இருந்துள்ளனர். அவர்கள் மூவரைத் தவிர அந்தப் பெட்டியில் வேறு யாரும் பயணிக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். தனியாக பெண் பயணிப்பதை கவனித்த அந்த நபர், அந்தப் பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட முயன்றுள்ளார். அதை அந்தப் பெண் தடுத்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்து, அந்தப் பெண்ணை ரயிலில் இருந்து அந்த நபர் வெளியில் தள்ளியதாக தெரிகிறது. இதனை குழந்தை தெரிவித்ததன் அடிப்படையில் போலீசார் பகிர்ந்துள்ளனர். அதோடு அந்த நபரும் ரயிலில் இருந்து அப்போதே குதித்து தப்பியுள்ளார்.

தான் இறங்க வேண்டிய இடத்திற்கு 20 கிலோ மீட்டர் தொலைவு இருந்தபோது அந்தப் பெண் தனது கணவருக்கு போன் செய்து ரயில் நிலையம் வருமாறு தெரிவித்துள்ளார். அதன்படி அவரது கணவரும் வந்துள்ளார். அந்த இடைப்பட்ட நேரத்தில் இந்தக் கொடூர சம்பவம் நடந்துள்ளது.

தொடர்ந்து ரயிலில் இருந்து குதித்து காயமடைந்த அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் பெயர் சந்தீப் என்றும், வயது 27 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே போலீசார் இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

வியாழன் அன்று இரவு ரோஹ்தக் பகுதியில் இருந்து 145 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தொஹானாவுக்கு ரயிலில் தனது மகனுடன் அந்தப் பெண் பயணித்துள்ளார். அந்த பெண்ணின் உடலை போலீசார் மற்றும் உறவினர்கள் தேடியுள்ளனர். இரவு நேரம் என்பதாலும், குற்றம் நிகழ்ந்த இடம் புதர் மண்டியிருந்த காரணத்தாலும் அவரது உடலை கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது. விடிந்த பிறகு அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இரவு நேர பணியில் இருந்த போலீசார் முறையாக ரயில் பெட்டிகளில் பணிகளை மேற்கொண்டார்களா மற்றும் பாதுகாப்பு குறைபாடு இருந்ததா என்பது குறித்து விசாரித்து வருவதாக ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x