Published : 02 Sep 2022 04:45 AM
Last Updated : 02 Sep 2022 04:45 AM

கள்ளக்குறிச்சி நகைக்கடை கொள்ளையில் வடமாநில கொள்ளையர் சிக்கினர் - 1.5 கிலோ தங்கம் மீட்பு

லாலாஃபூலா ரத்தோட்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே நகைக் கடையில் நடந்த கொள்ளை சம்பவத்தில், புனேவைச் சேர்ந்த 3 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து ஒன்றரை கிலோ தங்கம் மற்றும் 17 கிலோ வெள்ளிப் பொருட்கள் கைப்பற்றியுள்ளனர்.

கள்ளக்குறிச்சி அருகேயுள்ளது புக்கிரவாரி புதூர் கிராமம். இக்கிராமத்தில் உள்ளது  குமரன் சொர்ண மகால் நகைக்கடை. கடந்த மாதம் 8-ம் தேதி இக்கடையின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், 281 பவுன் நகை மற்றும் 30 கிலோ வெள்ளி மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

கொள்ளையடித்த நகைகளை அருகில் உள்ள சோளக்காட்டு பகுதிக்கு எடுத்துச் சென்று கொள்ளையர்கள் பங்கு பிரித்து சென்றுள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். சோளக்காட்டுப் பகுதியில் நகைப் பெட்டிகளை வீசிவிட்டு சென்றதில், சிறு மூக்குத்திகள், சிறு வளையங்கள் சிதறி கிடந்தன. அதை போலீஸார் மீட்டெடுத்தனர்.

இக்கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை பிடிக்க டிஎஸ்பி புகழேந்தி கணேசன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை நடந்து வந்தது.

முதற்கட்டமாக வங்கியின் கண்காணிப்பு கேமரா மூலம் தடயங்கள் சேகரிக்கப்பட்டது. கொள்ளையர்கள் பயன்படுத்திய வாகனங்களின் தடயத்தைக் கொண்டு,கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கண்டறிந்தனர்.

அதன்படி மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த கும்பல் குடும்பமாக புதுச்சேரியில் வந்து தங்கி, இக்கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

குறிப்பாக புனே மாவட்டத்தைச் சேர்ந்த லாலாஃபூலா ரத்தோட், ராமதாஸ் குலாப்சிங் ரத்தோட், அஜய்பகவான் நானாவத், மற்றும் சர்னால் மத்யா நானாவத் ஆகியோர் புக்கிரவாரி நகைக் கடை கொள்ளையில் ஈடுபட்டதை போலீஸார் உறுதி செய்தனர்.

அவர்களை பல இடங்களில் தேடிவந்த நிலையில், நேற்று, புதுச்சேரியில் வைத்து லாலாஃபூலா ரத்தோட், அஜய்பகவான் நானாவத், மற்றும் சர்னால் மத்யா நானாவத் ஆகிய 3 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 1,510 கிராம் தங்க ஆபரணங்களையும், 17 கிலோ வெள்ளிப் பொருட்களையும் மீட்டதாகவும், கொள்ளையடித்த நகைகளில் 20 கிராம் நகைகள் புதுச்சேரியில் உள்ள கடையில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பகலவன் தெரிவித்தார்.

இக்கொள்ளை சம்பவத்தில் தலைமறைவாக உள்ள ராமதாஸ் குலாப்சிங் ரத்தோட்டை தேடி வருவதாகவும் கண்காணிப்பாளர் பகலவன் தெரிவித்தார். பெரிய அளவிலான நகைக்கடை கொள்ளையை குறுகிய காலத்தில் மீட்டெடுத்த தனிப்படை போலீஸாரை மாவட்ட எஸ்பி பாராட்டினார்.

இக்கும்பல் குடும்பமாக புதுச்சேரியில் வந்து தங்கி, இக்கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x