Published : 30 Aug 2022 11:09 AM
Last Updated : 30 Aug 2022 11:09 AM
புதுடெல்லி: பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரங்கள் பட்டியலில் தலைநகர் டெல்லி முதலிடத்தில் உள்ளது. மும்பை, பெங்களூரு நகரங்கள் முறையே 2 மற்றும் 3ஆம் இடங்களில் உள்ளன.
தேசிய குற்ற ஆவணக் காப்பக (என்சிஆர்பி) 2021 அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையின்படி 2021 ஆம் ஆண்டில் தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு எதிராக 13,892 குற்றங்கள் நடந்துள்ளன. இது கடந்த 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 40% அதிகமாகும்.
நாட்டில் உள்ள 19 மெட்ரோபாலிட்டன் நகரங்களில் நடந்த பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒப்பிட்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் தலைநகர் டெல்லியில் மட்டுமே 32.20 சதவீத குற்றங்கள் பதிவாகியுள்ளன. டெல்லிக்கு அடுத்தபடியாக மும்பையில் 5,543 குற்றங்களும், அடுத்ததாக மும்பையில் 3,127 குற்றங்களும் நடந்துள்ளன.
என்ன மாதிரியான குற்றங்கள் அதிகம் நடக்கின்றன? தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு எதிராக அதிகமான குற்றங்கள் நடக்கும் சூழலில் ஆள்கடத்தல் (3048), கணவரால் ஏற்படும் வன்கொடுமை (4674), பெண் பிள்ளைகள் பலாத்காரம் (833) ஆகியவையே அதிகமாக நடக்கும் முதல் மூன்று குற்றங்களாக உள்ளன.
கடந்த 2021 புள்ளிவிவரத்தின்படி டெல்லியில் அன்றாடம் 2 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்படுகின்றனர்.
2021ல் டெல்லியில் மட்டும் 13,982 பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில் மொத்தமுள்ள 19 மெட்ரோபாலிட்டன் நகரங்களிலும் 43,414 குற்றச் சம்பவங்கள் பெண்களுக்கு எதிராக நடந்துள்ளன.
2021ல் தலைநகர் டெல்லியில் 136 வரதட்சணைக் கொடுமை மரணங்கள் நடந்துள்ளன. பெண்ணின் மாண்பைக் குறைக்கும் வகையில் 2,022 சம்பவங்கள் நடந்துள்ளன. போக்ஸோ சட்டத்தின் கீழ் 1357 வழக்குகள் பதிவாகியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT