Published : 25 Aug 2022 04:20 AM
Last Updated : 25 Aug 2022 04:20 AM

பல்லடம் அருகே விவசாயியிடம் ரூ.10 லட்சம் நூதன மோசடி: டெல்லியில் பதுங்கியிருந்த 2 பேர் கைது

திருப்பூர்

பல்லடம் அருகே வடமலை பாளையத்தை சேர்ந்தவர் குணசேகரன் (37). விவசாயி. இவருடைய செல்போன் எண்ணுக்கு கடந்த மே, 26-ம்தேதி தனியார் நிறுவன பைனான்ஸ் மூலம் ரூ. 1 கோடி கடன் தருவதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணை தொடர்பு கொண்டு கடன் பெறுவதற்கான நடைமுறைகள் தொடர்பாக குணசேகரன் விசாரித்துள்ளார். மறுமுனையில் பேசிய நபர், ரூ.1 கோடி கடன் பெற தாங்கள் அனுப்பும் இணையதள லிங்க்கில் உள்ள வங்கிக்கணக்குக்கு முன்பணம் கட்டவேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதை நம்பிய குணசேகரன், ஜூன் 13-ம் தேதி ரூ.10 லட்சம் கட்டி உள்ளார். அதன்பிறகு தொடர்புடைய எண்ணை பலமுறை குணசேகரன் தொடர்பு கொண்டும், அழைப்பை யாரும் ஏற்கவில்லை. ஏமாற்றமடைந்த அவர், கடந்த ஜூலை 7-ம் தேதி திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் உத்தரவுப்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணசாமி, ஆய்வாளர் சித்ராதேவி, உதவி ஆய்வாளர் ரோஸ்லின் அந்தோணியம்மாள் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, மர்மநபர்களை தேடி வந்தனர். இவ்வழக்கு தொடர்பாக டெல்லியில் பதுங்கிஇருந்த 2 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

விவசாயியை ஏமாற்றிய பிஹார் மாநிலத்தை சேர்ந்த முகமது ஜபீர் அன்சாரி (27), வடமேற்கு டெல்லியை சேர்ந்த ஹரீஷ்குமார் (21) ஆகியோர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 12 செல்போன்கள், 2 மடிக்கணினிகள், ரூ. 15 ஆயிரம்ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம். இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இருவரது வங்கிக்கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன, என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x