Last Updated : 23 Aug, 2022 11:44 PM

 

Published : 23 Aug 2022 11:44 PM
Last Updated : 23 Aug 2022 11:44 PM

இலங்கைக்கு கடத்த இருந்த பல கோடி மதிப்பிலான சுறா பீலி, கடல் அட்டைகள் பறிமுதல் - 2 பேர் கைது

படவிளக்கம்: இலங்கைக்கு கடத்த வைத்திருந்த சுறா பீலி மற்றும் கடல் அட்டைகளை பார்வையிட்ட வனத்துறையினர்

ராமநாதபுரம்: திருப்புல்லாணி அருகே இலங்கைக்கு கடத்த இருந்த பல கோடி மதிப்புள்ள சுறா பீலி, கடல் அட்டைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே சல்லித்தோப்பு கடற்ரைபகுதியில் இருந்து அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்தப்படுவதாக ராமநாதபுரம் கியூ பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் கியூ பிரிவு போலீஸார் அப்பகுதிக்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அங்குள்ள தென்னந்தோப்பு ஒன்றில் அரசால் தடை செய்யப்பட்ட சுறா மீன் பீலிகள் (சுறா துடுப்பு) மற்றும் பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் ஆகியவை மூட்டை மூட்டையாக ஒரு நாட்டுப் படகில் பதுக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனையடுத்து சுமார் 13 மூட்டைகளில் இருந்த சுறா பீலிகள் மற்றும் 23 மூட்டைகளில் இருந்த கடல் அட்டைகள் பைபர் படகு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. இந்த கடல் அட்டை மற்றும் சுறா பீலி இலங்கைக்கு கடத்துவதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.

இதன்பின் அந்த தோப்பின் காவலாளிகளாக இருந்த புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே நெட்டியேந்தலைச் சேர்ந்த செல்வம் (32), ஆவுடையார்கோவில் அருகே ஆல்காட்டிவயலைச் சேர்ந்த ரஞ்சித் (28) என்ற இருவரை போலீஸார் கைதும் செய்தனர். தோப்பின் உரிமையாளரான ராமநாதபுரத்தைச் சேர்ந்த விஜய் ஆனந்த்(40) என்பவரை போலீஸ் தேடிவருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட சுறா பீலி உள்ளிட்ட பொருட்கள் உடன் கைது செய்யப்பட்ட செல்வம், ரஞ்சித் ஆகியோரையும் கீழக்கரை வனத்துறையினரிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x