Published : 23 Aug 2022 07:20 AM
Last Updated : 23 Aug 2022 07:20 AM
கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஊராட்சி மன்றத் தலைவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, பாஜக இளைஞரணி ஒன்றியத் தலைவர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவில்பட்டி அருகேயுள்ள தெற்கு திட்டங்குளத்தைச் சேர்ந்தவர் பொன்ராஜ்(65). இவர், திட்டங்குளம் ஊராட்சி மன்றத் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை ஊராட்சி மன்ற அலுவலகம் சென்றுவிட்டு, மதியம் 12 மணிக்கு மேல் தெற்கு திட்டங்குளம் விஜயாபுரி சாலையில் உள்ள தனது தோட்டத்துக்குச் சென்றார்.
அப்போது அங்கு வந்த சிலர், பொன்ராஜை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பியோடினர். தகவலறிந்து வந்த டிஎஸ்பி வெங்கடேசன், காவல் ஆய்வாளர்கள் சுஜித் ஆனந்த், கிங்ஸ்லி தேவானந்த் மற்றும் போலீஸார், விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில், ஊராட்சித் தலைவர் கொலை செய்யப்பட்டதை அறிந்து, அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அப்பகுதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், ஊராட்சித் தலைவர் கொலை தொடர்பாக தெற்கு திட்டங்குளம் கீழத்தெருவைச் சேர்ந்த, கோவில்பட்டி வடக்கு ஒன்றிய பாஜக இளைஞரணித் தலைவர் கார்த்திக் (33) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது சிறுவன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
காரணம் என்ன?
ஆக. 15-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு நடந்த கிராமசபைக் கூட்டத்தில், திட்டங்குளத்தில் கட்டி முடிக்கப்பட்ட கழிப்பறையை உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஊராட்சித் தலைவர் பொன்ராஜிடம், கார்த்திக் கொடுத்துள்ளார். இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பொன்ராஜ் கொலை செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
இதற்கிடையில், பொன்ராஜின் உடல் வைக்கப்பட்டிருந்த கோவில்பட்டி அரசுமருத்துவமனை முன் திட்டங்குளம் ஊராட்சி மக்கள் திரண்டு, “கொலையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைதுசெய்ய வேண்டும்” என வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT