Published : 20 Aug 2022 07:22 AM
Last Updated : 20 Aug 2022 07:22 AM

நிதி நிறுவன கொள்ளை வழக்கில் மேலும் 3 பேர் கைது

சென்னை: சென்னை வடபழனியில் உள்ள நிதி நிறுவனத்தில் ரூ.30 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

வடபழனி மன்னார் முதலி தெருவைச் சேர்ந்தவர் சரவணன். இவர், தனது குடியிருப்பின் முதல் தளத்தில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 16-ம் தேதி இந்த நிதி நிறுவனத்தில் புகுந்த ஒரு கும்பல், அங்கிருந்த ஊழியர்களை கத்திமுனையில் மிரட்டி, ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பியது.

அப்போது, அந்த கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த ஒருவரை, பொதுமக்கள் உதவியுடன் நிதி நிறுவன ஊழியர்கள் பிடித்து, போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவர் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில், அவர் சென்னை ஆழ்வார் திருநகர் பகுதியில் உள்ள இந்திரா நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ரியாஸ் பாஷா என்பதும், தனது நண்பர்கள் இஸ்மாயில், பரத், கிஷோர் கரண், சந்தோஷ், தமிழ்ச்செல்வன், கண்ணன், தினேஷ் ஆகியோருடன் சேர்ந்து, நிதி நிறுவனக் கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, தலைமறைவாக இருந்த கொள்ளை கும்பலைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், கிஷோர் கரண், தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் கடந்த 18-ம் தேதி சரணடைந்தனர்.

இதற்கிடையில், சந்தோஷ், தினேஷ் ஆகிய இருவரை ராணிப்பேட்டையிலும், கண்ணனை சென்னை மாங்காட்டிலும் போலீஸார் நேற்று கைது செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x