Published : 19 Aug 2022 03:49 AM
Last Updated : 19 Aug 2022 03:49 AM
சென்னை: அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் திடீர் திருப்பமாக, செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளர் வீட்டிலிருந்து 3.7 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த கொள்ளை வழக்கில் அவருக்கு தொடர்பு உள்ளதா? என தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை அரும்பாக்கம், ரசாக்கார்டன் சாலையில் பெடரல் வங்கியின் நகைக்கடன் பிரிவான பெட் வங்கி நிதிச் சேவைகள் மையம் இயங்கி வருகிறது. இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த நகைகள் கடந்த 13-ம்தேதி கொள்ளை போனது. பட்டப்பகலில் காவலாளிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, வங்கி ஊழியர்களை கத்தி முனையில் மிரட்டி கட்டிப்போட்டு விட்டு, இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றது. 31.7 கிலோதங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த துணிகர கொள்ளை குறித்து அரும்பாக்கம் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்டமாக, தப்பிய கொள்ளையர்களை பிடிக்க 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதையடுத்து கொள்ளையில் ஈடுபட்டதாக வில்லிவாக்கம் பாரதி நகர், 2-வது தெருவைச் சேர்ந்த சந்தோஷ்(30), அதே பகுதி பாலாஜி(28) ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 18 கிலோ நகை பறிமுதல் செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து சூரியா மற்றும் கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் இன்னொரு வங்கி கிளையின் மண்டலமேலாளர் முருகன் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 13.7கிலோ என மொத்தம் 31.7 கிலோதங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இருப்பினும் கொள்ளை போன தங்கம் அளவை குறிப்பிடுகையில் பல்வேறு முரண்பட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதையடுத்து கொள்ளைபோன தங்கம் எவ்வளவு என்பது குறித்து ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வங்கி நிர்வாகிகளிடம் காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொள்ளை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட பாலாஜி மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரையும் அரும்பாக்கம் போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையின்போது சந்தோஷ் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ‘‘எனது மனைவி ஜெயந்தியிடம் 3.7 கிலோ தங்க நகைகளை கொடுத்தேன். நாங்கள் போலீஸாரிடம் சிக்கி விட்டாலோ, பிரச்சினை என்றாலோ இந்த நகைகளை விற்று எங்களுக்கு உதவ வேண்டும் என்று கூறினேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஜெயந்தியிடம் தனிப்படை போலீஸார் விசாரணைநடத்தினர். இதில் அவர், இந்த நகைகளை தனது உறவினரான செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம்காவல் நிலைய ஆய்வாளர் அமல்ராஜின் மனைவி இந்திராவிடம் ஒப்படைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
அதன்பேரில் தனிப்படை போலீஸார் ஆய்வாளர் அமல்ராஜ் வசித்துவந்த, மேல்மருவத்தூர் பகுதியில் உள்ள மருவூர் அவென்யூவில் உள்ள வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தியபோது, அமல்ராஜே அந்த நகைகளை போலீஸாரிடம் நேர்மையாக ஒப்படைப்பது போன்று கொடுத்துள்ளார்.
திருட்டு நகைகள் வீட்டில் இருப்பது முன்கூட்டியே தெரிந்திருந்தும், அதுகுறித்து தகவல் தெரிவிக்காமல், போலீஸாரின் விசாரணைக்குப் பிறகு ஒப்படைத்ததால் அவரும் இந்த கொள்ளை கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து அவரும் இந்த விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.
அதைத்தொடர்ந்து, ஆய்வாளர் அமல்ராஜ், அவரது மனைவி, கொள்ளை வழக்கில் சிக்கிய சந்தோஷின் மனைவி ஜெயந்தி ஆகிய 3 பேரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. ஆய்வாளர் அமல்ராஜிக்கு இந்த வழக்கில் நேரடி தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை முடிவில் தெரிய வரும் என போலீஸ் தரப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கொள்ளையடிக்கப்பட்ட தங்கத்தை வீட்டில்மறைத்து வைத்திருந்த காரணத்தினால் ஆய்வாளர் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தற்போது போலீஸார் ஆய்வாளர் அமல்ராஜை பணியிடை நீக்கம் செய்து காஞ்சிபுரம் சரக டிஐஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT