Published : 15 Aug 2022 07:52 AM
Last Updated : 15 Aug 2022 07:52 AM

அரும்பாக்கம் கொள்ளை வழக்கில் வங்கி மேலாளரின் உறவினர்கள் 3 பேர் கைது: 18 கிலோ தங்க நகைகள் பறிமுதல்

சென்னை: அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை வழக்கில் வங்கி மேலாளரின் உறவினர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 18 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னை அரும்பாக்கம், ரசாக்கார்டன் சாலையில் தனியார் வங்கிக்கு (ஃபெடரல் வங்கி) சொந்தமான விரைவு நகைக்கடன் வழங்கும் பிரிவின் அலுவலகம் (ஃபெட் கோல்டு லோன்) செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனத்தில் அப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான வாடிக்கையாளர்கள் தங்களது நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், அங்கு நேற்றுமுன்தினம் இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 3 பேர், காவலாளி மற்றும் ஊழியர்களை கட்டிப்போட்டும், மயக்க குளிர்பானம் கொடுத்தும் ரூ.20 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துத் தப்பினர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு அரும்பாக்கம் போலீஸார் சென்றனர்.

மேலும், காவல் கூடுதல் ஆணையர் (வடசென்னை) அன்பு மற்றும் போலீஸ் அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் வங்கியில் வேலை பார்த்த நபர்களே கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதில், கொள்ளை சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டது, நிறுவனத்தின் ஊழியர் (இதே வங்கியில் வில்லிவாக்கம் கிளை) சென்னையை பாடியைச் சேர்ந்த முருகன் என தெரியவந்தது.

4 தனிப்படைகள்

இச்சம்பத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தலைமறைவாக இருந்த முருகனின்வீட்டுக்குச் சென்று நேற்று போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில், கொள்ளை சம்பவத்தில் முருகனின் உறவினர் என கூறப்படும் பாலாஜி என்பவருக்கு கொள்ளையில் தொடர்பு இருப்பதாக தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அவரை கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கொள்ளையடிக்க திட்டமிடல்

கூட்டாளிகளுடன் கொள்ளையில் ஈடுபட்ட முருகன் கொள்ளை சம்பவத்துக்கு ஒருவாரத்துக்கு முன்பே எப்படி வர வேண்டும், எப்படி செயல்பட வேண்டும், எப்படி நகைகளை கொள்ளையடிக்க வேண்டும் என நன்கு திட்டமிட்டு கைவரிசை காட்டியுள்ளார்.

கொள்ளையடித்த நகைகள் சுமார் 32 கிலோவுக்கும் அதிகம் என்பதால் அதை திட்டமிட்டபடி யாருக்கும் சந்தேகம் வராதபடி 3 மூட்டைகளில் கட்டி எடுத்துச் சென்றுள்ளனர்.

கொள்ளையர்களை தேடி தனிப்படை போலீஸார் திருவண்ணாமலை மட்டும் அல்லாமல் தமிழகத்தின் பல்வேறு மா வட்டங்களுக்கும் விரைந்துள்ளனர். அண்டை மாநில போலீஸாருக்கும் கொள்ளை குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரும்பாக்கம் வங்கிக் கொள்ளையில் வங்கி மேலாளர் முருகனின் உறவினர்கள் பாலாஜி, சக்திவேல், சந்தோஷ் ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 18 கிலோ நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ரூ.1 லட்சம் சன்மானம்

முன்னதாக, அரும்பாக்கம் கொள்ளை குறித்து தகவல் கொடுக்கும் பொதுமக்களுக்கு ரூ. 1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என தமிழக காவல் துறையின் தலைமை டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்திருந்தார்.

நகைகள் அனைத்தும் காப்பீடு செய்யப்பட்டுள்ளன. எனவே,வாடிக்கையாளர்கள் கவலைப்படத் தேவையில்லை என வங்கி தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x