Published : 12 Aug 2022 07:18 AM
Last Updated : 12 Aug 2022 07:18 AM
சென்னை: சென்னையில் கடைகளில் பேடிஎம் க்யூ.ஆர். கோடு ஸ்டிக்கரை மாற்றி, நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட ஊர்க்காவல் படை வீரர் கைது செய்யப்பட்டார்.
சென்னை துரைப்பாக்கம் அடுத்த ஒக்கியம்பேட்டை பிள்ளையார் கோயில் தெருவில் ஆனந்த்(32) என்பவர் டிபன் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வரும்வாடிக்கையாளர்கள் சிலர், அங்குஒட்டியிருக்கும் பேடிஎம் க்யூ.ஆர். கோடு மூலம் பணம் செலுத்துகின்றனர்.
இந்நிலையில், சில தினங்களாகக்யூ.ஆர். கோடு மூலம் செலுத்தும் பணம், ஆனந்தின் வங்கிக்கணக்குக்கு செல்லவில்லை. இதனால் குழப்பமடைந்த ஆனந்த்,வங்கிக்கு நேரில் சென்று கேட்டுள்ளார்.
அப்போது வங்கி ஊழியர்கள், ‘‘உங்கள் கணக்கில் சில நாட்களாக எந்தப் பணமும் வரவில்லை’’ என்று கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஆனந்த், வாடிக்கையாளர்கள் அனுப்பும் பணம் எங்கு சென்றது என்பது தெரியாமல் மேலும் குழம்பினார்.
பின்னர், இதுகுறித்து கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீஸார் ஆனந்த்டிபன் கடையில் ஒட்டி வைத்திருந்த க்யூ.ஆர். கோடு ஸ்டிக்கரை ஸ்கேன்செய்து, சிறிய தொகையை அனுப்பினர். ஆனால்,பணம் உரிமையாளர் ஆனந்த்வங்கிக் கணக்குக்கு செல்லவில்லை.
இதையடுத்து, பணம் சென்ற வங்கிக் கணக்கை ஆய்வு செய்தபோது, தர் என்பவரது வங்கிக் கணக்குக்கு பணம் சென்றதைக் கண்டுபிடித்தனர். பணம் சென்ற வங்கிக் கணக்கு எண்ணைக் கொண்டு, முகவரியையும் கண்டுபிடித்தனர்.
இந்த நூதன மோசடியில் ஈடுபட்டது கண்ணகி நகரைச் சேர்ந்த தர்(21) என்பது தெரிந்தது. அவரைக் கைது செய்த போலீஸார், காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
திருவான்மியூரில் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வரும் தர், சென்னை காவல் துறையில் காவலராகப் பணிபுரிவதுபோல போலி அடையாள அட்டை தயாரித்து வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும், தனது வங்கிக் கணக்கு இணைக்கப்பட்ட க்யூ.ஆர். கோடு ஸ்டிக்கரைப் பெற்று, அதை ஆனந்த் டிபன் கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளின் உரிமையாளர்களின் கவனத்தை திசைதிருப்பி, அவர்கள் ஒட்டியிருந்த க்யூ.ஆர். கோடுக்கு மேல் இவரது க்யூ.ஆர். கோடு ஸ்டிக்கரை ஒட்டி, மோசடியில் ஈடுபட்டதையும் போலீஸார் கண்டுபிடித்தனர். இந்த மோசடி மூலம்லட்சக்கணக்கில் அவர் சம்பாதித்தும் தெரியவந்துள்ளது.
கடந்த 15 நாட்களில் மட்டும்,உரிமையாளர்களுக்குத் தெரியாமல் 7 கடைகளில் தனது க்யூ.ஆர். கோடு ஸ்டிக்கரை ஒட்டி, தர் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT